பொள்ளாச்சி : பொள்ளாச்சி குடியிருப்பு பகுதியில் மண்மேடாக மாறியுள்ள ரோடுகள், பயணிக்க லாயிக்கற்றதாக மாறியுள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 170.22 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், நடைபெற்று வருகின்றன. அதில், குழாய் பதித்தல், ஆள் இறங்கும் குழிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரோடுகள் தோண்டப்பட்டன.தோண்டப்பட்ட ரோடுகள் பெயரளவுக்கு மூடப்பட்டு மண் மேடுகளாக மாறியுள்ளன. குடியிருப்பு பகுதியில் உள்ள ரோடுகள், குண்டும், குழியுமாக உருமாறி விபத்து ஏற்படுத்தும் பகுதிகளாக மாறியுள்ளன.பயணிக்க லாயக்கற்ற ரோட்டில், செல்லும் வாகனங்கள் பழுதாகின்றன.
ரோட்டில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரிப்பதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது; மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தோண்டப்பட்ட ரோடுகள் எப்போது சீரமைக்கப்படும் என, நகராட்சி நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்புகின்றனர்.நெரிசல் அதிகரிக்குதுபொள்ளாச்சி நகரப்பகுதியில், குறுக்கு ரோடுகளாக உள்ள குடியிருப்பு பகுதி ரோடுகள் மிக மோசமாக உள்ளன. இதனால், இந்த ரோடுகளை பயன்படுத்த தயங்கும் வாகன ஓட்டுனர்கள், மெயின் ரோட்டிலே பயணிக்க வேண்டியுள்ளது.
மேலும், நகரப்பகுதியில் உள்ள ரோடுகள் விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடப்பதால், வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. நகரத்துக்குள் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டுனர்கள் திணறுவது வாடிக்கையாகி உள்ளது.பல்லடம் ரோடு - பயாஸ்கோப் ரோட்டுக்கு இணைப்பு பாதையாக உள்ள, டாக்டர் முனுசாமி வீதி, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு, ரோடு பகுதியில் பள்ளங்கள் மட்டுமே உள்ளன. சாக்கடை கால்வாயும் சீரமைக்கவில்லை. சிறுபாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை, ரோடு வசதி ஏற்படுத்த வேண்டுமென, மக்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த மாதம் சீரமைப்புநகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது:பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த பகுதிகளில், 23 கோடி ரூபாய் செலவில் ரோடுகள் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிப்., மாதம் முதல் வாரம், பணிகள் துவங்கப்படும். இதற்காக, குடிநீர் வடிகால் வாரியத்துடன் பணிகள் முடித்த இடங்களில் ரோடுகள் தோண்டாமல் இருக்க கடிதம் பெறப்பட உள்ளது. அப்போது, விடுபட்டுள்ள பிரதான ரோடுகளும், குடியிருப்பு பகுதியிலுள்ள குறுக்கு ரோடுகளும் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE