வாழ்க்கை புரியாத புதிர், ஒரு வட்டம், வாழ்க்கை என்பது வரம் என வாழ்க்கை பற்றி பலவிதமான புரிதல்கள் உண்டு. அத்தியாவசிய பொருட்கள் துவங்கி அவசியம் எனக்கருதும் பொருட்கள் வரை காலாவதி அல்லது உத்திரவாதம் எவ்வளவு எனப் பார்த்து தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனால் ஒரே ஒருமுறை மட்டுமே வாழும் வாழ்க்கையை நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிறைவாகவா... பதில் நம்மிடம் மட்டுமே உண்டு.எனக்கு இது மட்டும் கிடைத்துவிட்டால் போதும் பிறகு வாழ்க்கையே மாறிவிடும் என அனைவருக்குமே பல விருப்பங்கள் உண்டு. அவை நிறைவேறி விட்டால் மட்டும் நாம் மகிழ்ச்சியாக இருந்துவிடுவோமா என்ன. இல்லை அடுத்தது என தேடல் துவங்கி கொண்டே இருக்கும்.
எளிமையான சிந்தனைகள்
மகிழ்ச்சி என்பது விலையுயர்ந்த பொருட்களிலோ, பெரிய சாதனைகளிலோ இல்லை. நம்மிடம், நம்மை சுற்றி உள்ளது. நம்முடைய விருப்பங்கள் நிறைவேறாத நேரங்களிலும், எதிர்பாராத இன்னல்களை சந்திக்க நேரிடும்போதும் ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற எண்ணம் தோன்றும். பிரச்னைகள் தரும் விளைவை விட அதைப் பற்றிய பயமே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். பிரச்னைகளை எண்ண ஓட்டத்தால் மிகைப்படுத்தி பூதாகரமாக்கி அதில் சிக்கிக் கொள்ளாமல் எவ்வளவோ பார்த்துவிட்டோம். இதையும் சமாளிப்போமே என்று எளிமையாக சிந்திக்கத் துவங்கினால் பிரச்னைகள் நம்மை பார்த்து ஓடிவிடும்.
ஆரோக்கியமான சூழல்
குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மீது உள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டுமெனில் பரிசுப்பொருட்கள் வழங்குவதன் மூலம்தான் என்றில்லை; அவர்களின் சிறப்பான செயல்களை பாராட்டுதலின் மூலம் கூட மகிழ்விக்கலாம். உண்மையான அன்பே ஆழமான மகிழ்வைத்தரும். இக்கட்டான நேரத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் மற்றும் ஆறுதலான வார்த்தைகள் வாயிலாக அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்ச்சியடையலாம். நம்முடைய எதிர்பார்ப்புகளை பிறர் மீது திணிக்கும்போதுதான் மனக்கசப்பு உருவாகிறது.நம்முடைய நிலைப்பாடும் நம்மை சுற்றி உள்ளவர்களின் நிலைப்பாடும் வேறுவேறாக இருக்கலாம். இதனை பக்குவமாக புரிந்து கொண்டாலே பாதி சிக்கல்களை களையலாம்.
விருப்பத்துடன் பணிபுரிவோம்
வேலைப்பளுவால் ஏற்படும் மனஅழுத்தங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க சரியான திட்டமிடலுடன் அன்றைய வேலைகளை அன்றே சரியாக முடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். பணிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போட்டு எளிதாக முடிக்க வேண்டிய வேலைகளை சுமையாக மாற்றிக்கொள்கிறோம். நமது திறனுக்கு அப்பாற்பட்ட வேலைகள் முடிப்பது சற்று கடினம் எனத்தெரிந்தும் சில வேலைகளை துவங்கும் போதும் மன அழுத்தம் ஏற்படுகிறது. நம்மால் முடியும் என்பது தவறில்லை.
அதே நேரத்தில் நம்முடைய திறன்களையும் மேம்படுத்திக் கொள்ளுதல் அதிக பயனளிக்கும்.அலுவலகத்தில் அல்லது வீட்டில் செய்ய வேண்டிய பணிகளை இதை செய்யத்தான் வேண்டுமா என்ற அலுப்புடன் மேற்கொள்ளும்போது பன்மடங்கு பெரியதாகத் தோன்றும். நமக்கு பிடித்த வேலைகளை செய்யும்போது நேரம் போவதே தெரியாமல் அதில் மூழ்கி விடுவோம். முடிக்க வேண்டிய வேலைகளில் நமக்கு அதீத நாட்டம் இல்லையென்றாலும் அதுபோன்ற தருணங்களில் நம்மால் சிறப்பாக பணிகளை முடிக்கமுடியும் என்ற விருப்பத்துடன் துவங்கும் போது பெரிய வேலைகள் என்று சித்தரிக்கப்பட்டவை கூட இலகுவாக முடிந்துவிடும்.
நம்மிடமே உள்ளது மகிழ்ச்சி
இன்றைய சூழலில் எதிலும் அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.எனவே நமது எதிர்பார்ப்புகளும் அப்படியே அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. வாழ்க்கைப் பயணத்தில் தேடி, ஓடிக் களைத்த பிறகு நின்று கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் நமக்கான அடையாளம், அங்கீகாரம், பொருளாதாரம் இவற்றில் சிறந்து விளங்கினாலும் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை நாம் வாழ்ந்தோமா என்ற கேள்விக்கான பதிலே வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. நம்மை சுற்றி இருக்கும் சிறு விஷயங்களிலும் உள்ள மகிழ்ச்சியை அனுபவிப்போம். அனைவருக்குமே விருப்பமான செயல்கள் இருக்கலாம். நமக்கான நேரம் ஒதுக்கி மனதிற்கு விருப்பமான செயல்களை புரியும்போது மனம் புத்துணர்வு பெறும்.நம் நிறை,குறைகளை முழுமையாக புரிந்துகொண்டு அதற்கேற்ப சூழ்நிலையைக் கையாண்டாலே மகிழ்ச்சியாக இருக்கலாம்.
பொருளாதார நெருக்கடி, நம்பிக்கை வைத்தவர்களால் ஏமாறும்போது, ஆரோக்கியத்தில் இன்னல்கள் ஏற்படும் போதும் செய்வதறியாமல் திகைப்போம். இந்த உலகமே நமக்கு எதிராக நிற்பதைப் போன்று உணர்வோம். இதுபோன்ற சூழ்நிலைகளில் நெருக்கடிகளில் மூழ்கிவிடாமல் மாற்றி யோசித்து செயல்பட்டால் வாழ்வை மகிழ்ச்சியான பாதைக்கு திருப்பலாம்.நெருக்கடியான நேரங்களில் உடனடி முடிவுகளை தவிர்த்து சூழ்நிலைக்கு வெளியே நின்று யோசித்து செயல்பட்டால் மனம் தெளிவுறும்.இன்னல்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று.இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப்போல் பிறரின் வாழ்வோடு ஒப்பிட்டு மனக்கவலைக்கு ஆளாவதை தவிர்க்க வேண்டும். கத்தியை எப்படி பிடிக்கிறோம் என்பதைப் போன்றே பிரச்னைகளை கையாளும் விதமும். முடிவுகளை நமக்கு சாதகமாக்கிக் கொள்வது நமது கைகளில்தான் உள்ளது.
நிறைவான வாழ்க்கை
வாழ்க்கைப் பயணத்தில் நமது தேவைகளுக்கும்,நம்மை சார்ந்தவர்களுக்காகவும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம். சிறு,சிறு விஷயங்களிலும் மகிழ்ச்சியை கலந்து நாமும் நுகர்ந்து மற்றவர்களையும் மகிழ்வித்து வாழ்ந்தோமேயானால் ஓய்ந்துபோய் களைப்பாறும் தருணத்தில் நினைவுகள் தெம்பூட்டும், மகிழ்ச்சி தரும்,நிறைவைத் தரும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமான ஒன்று."சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் "எனும் பொன்மொழி இதை நமக்கு உணர்த்துகிறது.
அனைவரையுமே திருப்திபடுத்திவிட முடியாது என்ற எதார்த்த நிலையை உணரும்போது மகிழ்ச்சிக்கு குறைவில்லை.தேடல்களின் முடிவல்ல வாழ்க்கை. தேடல்களுக்கான பயணங்களும், அனுபவங்களுமே வாழ்க்கை என்பதை உணர்ந்து ஒவ்வொரு தருணங்களையும் எதிர்பார்ப்பின்றி ரசித்து வாழ தொடங்கினால் இன்பம் சூழும் இனிய வாழ்க்கை நிச்சயம் உங்கள் கைகளில்தான்.- சுபா செல்வகுமார்எழுத்தாளர், மதுரைsubhaselva2010@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE