திருக்கோவிலுார்:பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம், அரசின் பொங்கல் பரிசு தொகையை வசூலிக்க முயன்ற வேளாண் அலுவலர்களை, கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பிரதமரின் கிசான் திட்ட நிதியுதவியை, தமிழகத்தில் பலர் முறைகேடாக பெற்றனர். இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில், வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், அதிகளவு முறைகேடு நடந்த முகையூர், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியங்களில், பணத்தை வசூலிக்க முடியாமல் உள்ளது. குறிப்பாக, முகையூர் ஒன்றியத்தில் மட்டும், 1.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகையாக, 2,500 ரூபாயை, ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்கி வருகிறது.
இதை சரியான தருணமாக கருதிய, முகையூர் வட்டார வேளாண் அலுவலக ஊழியர்கள், சம்பந்தப்பட்ட கிராமங்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று, ரேஷன் கார்டுதாரர்களிடம், 2,500ஐ வங்கி கணக்கில் செலுத்த வலியுறுத்தினர். சு.கொல்லுாரில், கடந்த, 4ம் தேதி வேளாண் அலுவலர்கள், ரேஷன் கடைக்கு வந்த மக்களை சந்தித்து, பணத்தை திருப்பிச் செலுத்த வலியுறுத்தினர். இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அலுவலர்களை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, அலுவலர்கள் புறப்பட்டுச் சென்றனர்.கொரோனாவால் வேலை, வருவாய் இழந்த மக்களுக்கு, பொங்கல் பரிசாக அரசு அளித்த தொகையை வசூலிக்க வந்த வேளாண் அலுவலர்களின் செயல், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE