மதுரை:'சிறையில் கொரோனா பரவுகிறது' எனக் கூறி, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதி விடுப்பு கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த, ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு:என் மகன் ரவிச்சந்திரன்,முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், 27 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக, மதுரை மத்திய சிறையில் உள்ளார்.இவ்வழக்கில் ரவிச்சந்திரன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம், 2018ல் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.அதில் எவ்வித முடிவும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது.சிறைகளில் கொரோனா பரவுகிறது. சிறையில் சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை.எனவே, ரவிச்சந்திரனுக்கு நீண்டகால விடுப்பு அல்லது இரண்டு மாதங்கள் சாதாரண விடுப்பு வழங்க, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் அமர்வு, தமிழக உள்துறை செயலர், சிறைத் துறை ஏ.டி.ஜி.பி., மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆகியோர், ஜன., 27ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE