திருநெல்வேலி:அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில், துடிதுடித்து இறந்த போலீஸ் எஸ்.ஐ., கொலை வழக்கில், திருநெல்வேலி முன்னாள் கலெக்டர் கருணாகரன் ஆஜராகி, நேற்று சாட்சியம் அளித்தார்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி போலீஸ், எஸ்.ஐ.,யாக இருந்தவர் வெற்றிவேல், 42. இவர், 2010 ஜனவரி, 7ல், 'டூ - வீலரில்' கடனாநதி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது, ஒரு கும்பல் வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.கடையம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக இருந்த சிவசுப்பிரமணியனை கொலை செய்ய, அவரது மனைவி, குடும்பத்தினர் திட்டமிட்டதும், ஆள் மாறாட்டத்தில், 'ஹெல்மெட்' அணிந்து டூ - வீலரில் வந்த எஸ்.ஐ., வெற்றி வேல் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெற்றிவேல் உயிருக்கு போராடியபோது, அந்த வழியாக சென்ற, அப்போதைய தி.மு.க., அமைச்சர்கள் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம், மைதீன் கான், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட, 94 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.குற்றவாளிகள் மீது வெடிமருந்து சட்டப் பிரிவில் வழக்கு தொடர அனுமதியளித்த, அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன் - தற்போது கைத்தறித்துறை இயக்குனர் - திருநெல்வேலி 4வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் ஆஜராகி, நீதிபதி விஜயகாந்த் முன் சாட்சியளித்தார்.
இந்த படுகொலை சம்பவம் நடந்து இன்றோடு, 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் கதிரவன் கூறுகையில், ''வழக்கு, தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முக்கிய சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.''வாக்குமூலம் பெற்ற மற்றும் அடையாள அணிவகுப்பு நடத்திய மாஜிஸ்திரேட்கள், வழக்கு பதிந்த எஸ்.ஐ., விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் இன்னமும் விசாரிக்கப்பட உள்ளனர்,'' என்றார்.
முதல்வர் கருணை காட்டுவாரா?
எஸ்.ஐ., வெற்றிவேல் மனைவி பிச்சியம்மாள். 8ம் வகுப்பு மட்டுமே படித்திருந்ததால், புளியங்குடி டி.எஸ்.பி., அலுவலகத்தில் உதவியாளர் பணி வழங்கப்பட்டது. ஆனால், சிறு வயது குழந்தைகள் இருந்ததால், பணியில் சேரவில்லை.தற்போது, அவரது மகன் அசோக்குமார், 23, பி.இ., படித்துள்ளார். மகள், கல்லுாரியில் முதலாமாண்டு பயில்கிறார்.எனவே, 'மகனுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்' என, அவரது குடும்பத்தினர், சமீபத்தில் கோவில்பட்டி வந்த முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
மேலும், 2011ல் அ.தி.மு.க., ஆட்சியில், ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும்போது, துப்பாக்கி சூட்டில் இறந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், ஓசூரில் கொள்ளையர்களை பிடிக்கும் போது இறந்த ஏட்டு முனுசாமி, களியக்காவிளையில், கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ., வில்சன் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா, 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.ஆனால், 2010ல் தி.மு.க., ஆட்சியில் இறந்த எஸ்.ஐ., வெற்றிவேல் குடும்பத்துக்கு அரசு சார்பில், 7 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது. இதனால், 'வெற்றிவேல் மகன் அசோக்குமாருக்கு அரசுப் பணி வழங்க முதல்வர் முன்வர வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE