கோவை : கோவை ஆதிதிராவிடர் நலத்துறை மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு, அத்துறையின் மாவட்ட அலுவலர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கறவை மாடு வினியோகத்தில் முறைகேடு, வீட்டு மனை பட்டா வினியோகத்தில் முறைகேடு, நலத்திட்ட குழு கூட்டங்கள் நடத்தாமல் இருப்பது, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புறக்கணிப்பு என, பல்வேறு பிரிவுகளில் புகார் கூறப்பட்டுள்ளது.இப்புகாரின் உண்மைத் தன்மை அறியும் வகையில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் படி, மனுதாரரிடம் கலெக்டர் அலுவலகத்தில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு, கடந்தாண்டு அக்டோபரில் இது தொடர்பாக புகாரளித்த மனுதாரர் மணியரசு கூறுகையில், ''ஆதிதிராவிடர் துறை அதிகாரி பொறுப்பு ஏற்றது முதல் தற்போது வரை, எவ்வித நலத்திட்ட குழு கூட்டங்களும் நடத்தவில்லை. இலவச கறவை மாடு திட்டத்தில், வினியோகிக்கப்பட்ட மாடுகள் பல இறந்து விட்டன; நோயுற்ற மாட்டை கொடுத்துள்ளனர்.வீட்டு மனை பட்டா வினியோகத்தில், தகுதியற்றவர் களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்காக 13 வகையான குழுக்கள் உள்ளன. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அவை ஏதும் செயல்படுத்தப்படவில்லை. இது குறித்து, விசாரணையில் தெளிவாக தெரிவித்துள்ளேன்,'' என்றார்.ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பிரபாகரனிடம் கேட்டபோது, ''மனுதாரர் கூறும் அனைத்து குழுக்களுக்கும், மாவட்ட நிர்வாகமே பொறுப்பு. குழுவின் தலைவர், அதன் செயல்பாடுகள் குறித்த அடிப்படை புரிதல் இன்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இருதரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை அலுவலர் பதவிக்கு, ஊட்டியை சேர்ந்த தாசில்தார் ராம்குமார், புதிதாக பதவியேற்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பிரபாகரன், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE