புதுடில்லி:பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளில் இரண்டு ஆண்டுகளில் 460 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திரா, பீஹார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உட்பட 11 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் நக்சல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தற்போது 46 மாவட்டங்களில் மட்டுமே அவர்கள் உள்ளனர்.
பாதுகாப்பு படையினரின் தாக்குதல்களில் பலியான நக்சல்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: கடந்த 2018 ஜன. முதல் 2020 நவ. வரை பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 460 நக்சல்கள் கொல்லப்பட்டனர்; எதிர் தாக்குதலில் பாதுகாப்பு படையின் 161 பேர் வீர மரணம் அடைந்தனர்.
நக்சல்கள் தரப்பில் 2010ல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் என 1005 பேர் பலியாயினர். ஆனால் 2019ல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 202 ஆக குறைந்துள்ளது. கடந்த 2004 முதல் 2019 வரை போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதாக சந்தேகம் அடைந்து பழங்குடியினர் உட்பட 8197 பேரை நக்சல்கள் படுகொலை செய்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE