புதுடில்லி:வங்கி கடன் மோசடியில் கைதாகி லண்டன் சிறையில் உள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக அவரது சகோதரி மற்றும் கணவர் 'அப்ரூவர்' ஆக மாறி சாட்சி சொல்ல தனி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6498 கோடி ரூபாய் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில் நிரவ்மோடியின் மோசடிக்கு உடந்தையாக சட்ட விரோத பணப் பரிமாற்றம் மேற்கொண்ட குற்றச்சாட்டின்பேரில் அவரது சகோதரி புர்வி மேத்தா கணவர் மயாங்க் மேத்தா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து பெல்ஜியத்தில் வசிக்கும் புர்வி மேத்தாவும் பிரிட்டன் பிரஜையான மயாங்க் மேத்தாவும் 'அப்ரூவர்' ஆக விரும்புவதாக கூறி தங்களை மன்னிக்குமாறு தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு தனி நீதிமன்ற நீதிபதி வி.சி.பர்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'புர்வி மயாங்க் ஆகியோர் அப்ரூவராக மாறினால் மன்னிப்பு அளிப்பதில் ஆட்சேபணை இல்லை; ஆனால் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது' என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:புர்வி மயாங்க் ஆகியோரின் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவர்கள் நிரவ் மோடியின் மோசடி தொடர்பான அனைத்து விபரங்களையும் ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும். அவர்களின் தனிப்பட்ட தகுதியின் அடிப்படையில் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. நிரவ் மோடியை நாடு கடத்தி விசாரணைக்கு நிறுத்தவேண்டும். அப்போது புர்வி மயாங்க் ஆகியோர் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE