கோவை:தினமும் உயரும் இரும்பு விலை பொறியியல், மோட்டார் பம்ப் செட், கட்டுமான துறையில், உற்பத்தி செலவைகூட்டி தொழில் நிறுவனங்களை திணறடித்து வருகிறது.
தொழில் நகரான கோவை பொறியியல், ஆட்டோ மொபைல், கிரைண்டர், மோட்டார் பம்ப் செட் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறது. கொரோனா ஊரடங்கால் முடங்கிய தொழில் துறை வங்கிக்கடன், தவணை செலுத்த அவகாசம் போன்ற நடவடிக்கைகளால் படிப்படியாக மீள ஆரம்பித்தது.இதற்கு முட்டுக்கட்டையாக தற்போது இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
தொழில் நடத்த முடியாமல் திணறும் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செலவை கூட்டி வருகின்றன. இரும்பு விலை உயர்வதால் கட்டுமான பணிகளும் காலதாமதமாகி வருகின்றன. நேற்று காலை நிலவரப்படி, இரும்பு விலை டன், 4,000 ரூபாய் அதிகரித்து, 76 ஆயிரமாக இருந்தது. இதன் பிரதிபலிப்பால், மோட்டார் பம்ப் செட், கிரைண்டர் உள்ளிட்டவற்றின் விலை, 15 முதல், 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நவ., மாதம் ஆரம்பித்த மூலப்பொருட்கள் விலை உயர்வு தொழில் துறையை முடக்கி வருவதால் இரும்பு தாது உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, இறக்குமதிக்கு வழிவகுக்க மத்திய அரசிடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
அனைவருக்கும் பாதிப்பு
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க(சீமா) தலைவர் கார்த்திக் கூறியதாவது: கடந்தாண்டு மார்ச் மாதம் ஒரு டன், 44 ஆயிரம் ரூபாயாக இருந்த சாதாரண இரும்பு, டிச., மாதம், 64 ஆயிரமாக அதிகரித்தது. இன்று(நேற்று) ஒரே நாளில், 4,000 ரூபாய் அதிகரித்து, 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பவுண்டரிக்கு பயன்படும் 'பிக் அயர்ன்' டன் தற்போது, 44 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது; இது டிச., மாதம், 38 ஆயிரமாக இருந்தது.
கடந்த டிச., மாதம் டன், 64 ஆயிரத்து, 500 ரூபாயாக இருந்த 'எலக்ட்ரிக்கல் ஸ்டீல்' தற்போது, 80 ஆயிரமாக உள்ளது. இதனால், மோட்டார், பம்ப் செட்களுக்கு உற்பத்தி செலவு, 20 சதவீதம் கூடியுள்ளது. பம்ப் முழுமையாக பொருத்த தேவைப்படும் பம்ப், கேபிள், ஒயர், ஸ்விட்ச் உள்ளிட்டவை அடங்கிய 'பம்பிங் சிஸ்டம்' செலவு, 1.5 மடங்கு வாடிக்கையாளர்களுக்கு கூடியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
கட்டுமான பணி தொய்வு
இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) தலைவர் சுரேந்தர் விட்டல் கூறுகையில், ''இரும்பு விலையேற்றத்தை கருத்தில் கொண்டே, கட்டுமான பணிகளும் மெதுவாக நடந்துவருகிறது. கட்டுமான பொருட்களான கம்பி உள்ளிட்டவற்றின் விலை, திட்டமிட்ட, 'பட்ஜெட்'டை விட கூடுதலாகிறது. இதனால், கட்டுமான செலவு, 20 சதவீதம் கூடுதலாகியுள்ளது,'' என்றார்.
'ஏற்றுமதியில் கட்டுப்பாடு'
கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''இந்தியாவில் உற்பத்தியாகும் இரும்புக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு இரும்பு ஏற்றுமதியை நிறுத்தி வைத்தால் இந்தியாவில் இரும்பு விலை தானாகவே கட்டுக்குள் வந்துவிடும்,'' என்றார்.
'இறக்குமதியில் தாராளம்'
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், ''இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால், உற்பத்தி பொருட்களுக்கான விலையை உயர்த்த வேண்டியுள்ளது. வெளிநாடுகளுக்கு இரும்புத்தாது, இரும்பை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ஏற்றுமதி செய்வதை நிறுத்திவைக்க வேண்டும்.
தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்ப இரும்பு தயாராக உள்ளது. இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்து அரசு நடவடிக்கை எடுத்தால் இங்கு விலை கட்டுப்படுத்தப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE