சென்னை:ஊழியர்கள், அதிகாரிகளை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்திற்கு பிரிப்பது தொடர்பாக, மின் வாரிய உயர் அதிகாரிகள், முக்கிய ஆலோசனை நடத்தினர்.
தமிழக மின் வாரியம்,2010 நவம்பரில்,மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன. இரு நிறுவனங்களும், தனித்தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்றன. சொத்துகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், ஊழியர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் என, அனைவரும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரிபவர்களாக உள்ளனர். அவர்களும், தனித்தனி நிறுவனங்களுக்கு ஏற்ப பிரிக்கப்பட வேண்டும்.இதற்காக, மின் வாரியம், தொழிற்சங்கங்கள், தமிழக அரசு இடையில், முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இதற்கான வரைவு ஒப்பந்தம் தயாரித்து, மின் வாரியம், அரசுக்கு, ஏற்கனவே அனுப்பியிருந்தது.
அதன் மீது, அரசு கருத்து கேட்டது. அவற்றை, வாரியம், தொழிற்சங்கத்தினரிடம் தெரிவித்து, ஆலோசனை பெற்றுள்ளது. இது தொடர்பாக, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நடந்தது.
இதில், மின் வாரிய இணை மேலாண் இயக்குனர்கள், நிர்வாக இயக்குனர், இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஊழியர்களை பிரிப்பது உள்ளிட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்களை இறுதி செய்து, அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE