புதுடில்லி : மின்னணு ஓட்டுக்கு தடை விதித்து, பழையபடி ஓட்டுச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த, வழக்கறிஞர், ஜெய சுகின், தேர்தலில், மின்னணு முறையில் ஓட்டு போடுவதை தடை செய்து, ஓட்டுச் சீட்டில் முத்திரையிட்டு வாக்களிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மின்னணு ஓட்டுப் பதிவில், கணினி ஒருங்கிணைப்பை நாசகாரர்கள் முடக்கி குளறுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாகவே, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் அதை பின்பற்றவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, 'மின்னணு ஓட்டு இயந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வரும் தேர்தல் ஆணையம், ஓட்டுச் சீட்டு மூலம் வாக்களிப்பதற்கான ஒருவரின் அடிப்படை உரிமையை பறிக்கிறது' என, மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு,' ஓட்டளிப்பது ஒருவரின் அடிப்படை உரிமை என அரசியல் சாசனத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது' என, கேள்வி எழுப்பிய அமர்வு, இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE