உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய கொரோனா வைரஸ், உலகை மிரட்டும் வேளையில், தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க, தியேட்டர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமா துறையினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 50 சதவீதம் பார்வையாளர்களோடு இயங்க தியேட்டருக்கு, இதுவரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய், நேரில் சென்று, முதல்வர் இ.பி.எஸ்.சை சந்தித்ததும், 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர் இயங்க, அனுமதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் நடித்த படம், பொங்கலுக்கு வெளியாகிறதாம். ஒரு நடிகர், அவர் நடித்த படம் நஷ்டமடையக் கூடாது என கருதுகிறார்; முதல்வரும், அனுமதி வழங்குகிறார். தட்டிக்கேட்க முடியாத மக்களுக்கு, வீரியமிக்க கொரோனா தாக்கினால் நமக்கென்ன என்ற அலட்சியம் தானே அவர்களுக்கு! நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருப்போர் பெரும்பாலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களே. அவர்கள் படிப்பதற்கு கல்வி நிலையத்தை திறக்க, எத்தனை இடையூறு ஏற்பட்டன. இன்னும் அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு மிகவும், 'அத்தியாவசிய' தேவையான தியேட்டரை, முழுமையாக செயல்பட அனுமதித்து விட்டனர்.

அவர்களுக்கு கொரோனா வந்தால் என்ன? அந்த மாணவரின் குடும்பம் பாதிக்கப்பட்டால், அந்த நடிகருக்கும், முதல்வருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விஜயின் ரசிகர்கள், பொங்கல் ரிலீஸ் படத்தைப் பார்க்க முண்டியடித்து, தியேட்டருக்கு நுழைவர். முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி என, அனைத்தும் காற்றில் பறக்கும். இவ்வாறு பள்ளிப் பிள்ளைகள், மூடிய தியேட்டருக்குள், மூன்று மணி நேரம் இடைவிடாது இருக்கக்கூடிய நிலையில், தொற்று அபாயம் ஏற்படாதா என்ன? கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற அனைத்து சாத்தியக் கூறுகளும், கல்வி நிலையங்களில் உண்டு. தியேட்டரில் சாத்தியமா? கல்வியை விட, பொழுதுபோக்கு ஊடகமான சினிமாவிற்கு, இந்த அரசு முக்கியத்துவம் கொடுப்பது, வேதனை
அளிக்கிறது.
கொரோனா காலத்தில் மக்கள், சினிமா தியேட்டரை மறந்து விட்டனர். 'தியேட்டரை திறங்கள்' என, எவரும் போராடவில்லை. ஏனெனில் சினிமா என்பது, மக்களின் அத்தியாவசிய தேவை அல்ல. எனவே, இன்னும் சில காலங்களுக்கு, 50 சதவீத இருக்கைக்கான அனுமதியே சிறந்ததாக இருக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE