புதுச்சேரி; புதுச்சேரி ரேஷன்கடைகளை மூடவைத்தது கவர்னர் கிரண்பேடியும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் தான் என முதல்வர் நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.அவரது அறிக்கை:காங்., அரசு ரேஷன் கடைகளை மூடியதாகவும், ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமாக மாற்றியதாக புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி பொதுக் கூட்டத்தில் பேசினார். குறுகிய அரசியல் நோக்கோடு சிலர் கூறிய தவறான தகவலை அப்படியே பேசியிருக்கிறார் என்பது வருத்தத்துக்குரியது.மத்திய அரசிடமிருந்து அரிசியாகப் பெற்று, பொதுமக்களுக்கு அரிசியாகவே வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசால் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அரிசிக்குப் பதிலாக பணம் தான் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கவர்னர் கோரிக்கை வைத்து, அதனைத் தடுக்க நினைத்தார். புதுச்சேரி அரசின் தொடர் முயற்சியால் மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இதனை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கியிருந்தால் அந்த ஊழியர்களுக்கு கொரோனா கால கட்டத்தில் ஊதியம் கிடைத்திருக்கும். அதனையும் கெடுத்து, அமைச்சக ஊழியர்கள், பிற துறை ஊழியர்களை வைத்து வழங்கினார்.புதுச்சேரியில் உள்ள ரேஷன்கடைகளை மூட வைத்தது கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் உள் துறை அமைச்சகமும் தான். இது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம்.திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் பொய்கள் உண்மையாகி விடாது. இதற்கான விலையை வரும் சட்டசபை தேர்தலில் பொது மக்கள் அவர்களுக்கு வழங்கப் போவது உறுதி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE