கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி நகரில் விதியை மீறி சாலை யோரம் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சி நகரில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. நகரின் முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் பல உள்ளது. கார்கள், தள்ளுவண்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவிலான வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைத்தும், விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 'காம்பவுண்ட்' சுவரையொட்டி கார், டாடா ஏஸ், தள்ளுவண்டிகள் தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையொட்டி வழக்கத்தைவிட நகருக்குள் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, போலீசார் நாள்தோறும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE