கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஊருக்கு அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்ட தலைநகரமாக உள்ள கள்ளக்குறிச்சியில் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைத்துள்ளது. இதனால் தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளதால் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் ஆகிய நகரத்தின் நான்கு சாலைகளும் இணையும் இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளது.க்ஷ
மேலும் இந்த 4 சாலைகளின் சந்திப்பு பகுதியிலேயே காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, வங்கிகள், தாலுகா அலுவலகம், கோர்ட், பதிவாளர் அலுவலகம், கருவூலம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் பஸ் நிலைய பாதையை கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.நான்கு முனை சந்திப்பையொட்டி பஸ் நிலையம் அமைந்திருப்பது போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விரிவுபடுத்தப்பட்டன. ஒன்றரை ஏக்கருக்கும் மேலான இடவசதியுடன் கூடிய வகையில் பஸ் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு, சுற்று பகுதியில் கடைகள் கட்டி முடிக்கப்பட்டது.இருந்தும் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு குறுகலான சாலைகளினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்த சாலையை கடந்துதான் அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லவேண்டும். மாவட்டத்தின் தலைநகராகியுள்ள இங்கு பெருகி வரும் வாகன பெருக்கத்திற்கு ஏற்றவகையில் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலை வசதி போதுமானதாக இல்லாததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது.கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பஸ் டெப்போவிலிருந்து தினமும் 300க்கும் மேற்பட்ட டவுன் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அத்துடன் தனியார் பஸ்கள் மற்றும் சேலம், கடலுார், திருவண்ணாமலை, கும்பகோணம், திருச்சி, ஈரோடு, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட கோட்டத்திலிருந்து அரசு பஸ்கள் என தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.அத்துடன் நகரின் அனைத்து சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அனைத்தும் 50 ஆண்டுக்கு முன் கள்ளக்குறிச்சி நகர சாலைகளை மையமாக கொண்டதாக இருந்து வருகிறது. இதனாலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவது தடுக்க முடியாததாக உள்ளது.வாகன பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் கள்ளக்குறிச்சியில் சாலை வசதி இல்லாததாலும், பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியில் அமைந்திருப்பதால் சிக்னல் உள்ளிட்ட போக்குவரத்து நடைமுறைகளை செயல்படுத்த முடியாத நிலைக்கு கள்ளக்குறிச்சி மாறிவருகிறது.
இதனால் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிப்போனது. எனவே கள்ளக்குறிச்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையத்தை டவுன் பஸ் நிலையமாக மாற்றிடவும், வெளியூர் செல்லும் பஸ்களுக்கென நகரின் வெளிப்பகுதியில் புதிய பஸ் நிலையத்தினை அமைத்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE