விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 17ம் தேதி நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள 1,71,604 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 1,666 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இப்பணியில், சுகாதார துறை சார்ந்த அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 6,669 பேர் ஈடுபட உள்ளனர்.இந்த முகாம், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் பேரில், முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரும் 17 ம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.முகாம் நாளில் விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரு நாட்களில் பணியாளர்கள் வீடு தேடிச் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான விழிப்புணர்வை அனைத்து துறை அலுவலர்கள் தவறாமல் தங்களின் பணியாளர்கள் மூலம் கிராம மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், போலியோ மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சாய்ராபானு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட சுகாதார துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE