விழுப்புரம்; விழுப்புரத்தில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை, வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்திலும் நீடித்து வருகிறது.வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணி முதல் பரவலான மழை பெய்ய துவங்கியது. இந்த மழை நேற்று அதிகாலை 3.00 மணி முதல் கனமழையாக மாறியது. தொடர்ந்து நேற்று மாலை வரை மழை விட்டுவிட்டு பெய்தது.கொட்டி தீர்த்த கனமழையால், நகரமே வெள்ளக்காடானது. பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த மழையால், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழை நீர் வழக்கம் போல் நீச்சல் குளம் போல் தேங்கியது. இதில், பயணிகள் கடந்து செல்ல முடியாமல் தத்தளித்தனர்.அதேபோன்று நேருஜி ரோடு, காந்தி சிலையருகே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கொப்பளித்து கொண்டு வெளியேறியதால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.நகராட்சி மைதானத்தில் மழை நீர் குளமாக தேங்கியதால், அங்கிருந்த காய்கறி கடை வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.பிடாகம், பானாம்பட்டு உள்பட விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இதேபோன்று திண்டிவனத்தில் பெய்த கனமழை காரணமாக நகரின் பிரதான தெருக்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE