வாஷிங்டன் : 'அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான எச்1பி விசா முறையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்' என ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் இந்திய வர்த்தக குழு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இந்த விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'கொரோனா' பரவல் காலத்தில் வெளிநாட்ட வருக்கு எச்1பி விசா வழங்குவதை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.இந்த விசாவுக்கான தடை மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய அதிபராக வரும் 20ல் பதவியேற்க உள்ளார்.
'எச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு எனப்படும் அமெரிக்க குடியரிமை வழங்கும் முறைகள் எளிமையாக்கப்படும்' என அவர் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.இதையடுத்து அமெரிக்கா - இந்தியா பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் முகேஷ் ஆஹி கூறியுள்ளதாவது: ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. மேலும் அமெரிக்காவில் படிக்கும்வெளிநாட்டவருக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்கா வில் தொழில்நுட்ப நிபுணர்களின் தேவை 10 லட்சமாக உள்ளது. அதனால் தேவையின் அடிப்படையில் விசா எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.அதேபோல் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்க வேண்டும்.

அப்போது தான் அவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க ஆர்வமுடன் முன் வருவர். இந்தக் கோரிக்கையை ஏற்கும்படி ஜோ பைடனை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE