'விதுஷி அம்ருதா முரளி, 'ஹரிகாம்போதியும் தியாகராஜரும்' என்பதைப் பற்றி விளக்கி பேசினார்.அப்போது அவர், எவ்வாறு யாழ் மரபில் பாலையாழ் எனும் வாத்தியம், இந்த ஹரிகாம்போதிக்கு ஏற்ப மெட்டமைக்கப் பட்டிருக்கும் என்றும், அதனின்று உதித்த செம்பாலை, ஹரிகாம்போதியின் ஸ்வரங்களுக்கு நிகராக இருக்கும் எனும் தகவல்களையும் நமக்கு தந்தார்.தியாகராஜரைப் பொறுத்தமட்டில் வேங்கடமகியின், 72 மேளகர்த்தா முறையையே பின்பற்றிஉள்ளார். ஹரிகாம்போதி இதில், 28வது மேளம். அவர் தான், இந்த ராகத்தை உயிர்ப்பித்தவர். இதிலுள்ள கீர்த்தனைகள் - ராமநன்னு ப்ரோவரா, தினமணிவம்ச, உண்டேதி ராமுடு, எந்தரானி, எந்துகு நிர்தய, சனிதோடி, வல்லகாதன சீதா, - ஒவ்வொன்றும், தியாகராஜரின் மெட்டுகளின் வகைமைகள்.இதன் கிளைகளான காம்போதி, கமாஸ் மற்றும் யதுகுலகாம்போதி போன்றவை பாடப்பட்டு வந்த காலத்திலும், ஹரிகாம்போதியைத் தனித்து நிறுத்தி, அதைப் பாடுவதற்கான பாடங்களை நமக்குக் கற்பித்தவர் தியாகராஜரே. இவற்றை குறித்து சமீபத்தில் நாம் பார்த்தோம்.அதேபோல், ஹரிகாம்போதியிலிருந்து பிறந்த மற்ற ராகங்கள் இவையாகும் என்று தெரிவித்த அம்ருதா, இந்த ராகங்கள் அனைத்திலுமே, தியாகராஜர் பாடல்களை இயற்றியுள்ளார் என்றார்.அந்த ராகங்கள், சஹானா, சுரட்டி, கேதாரகௌளை, நாட்டக்குறிஞ்சி, பலஹம்ஸ, நாராயணி, சாயாதரங்கிணி, உமாபரணம், பஹுதாரி, ஜிங்களா, செஞ்சுகாம்போதி, ரவிச்சந்திரிகா, பலரஞ்சனி, ராகபஞ்சரம், சரஸ்வதி மனோஹரி, சுபோஷினி, கேசரி, ஈசமனோஹரி, நவரசகன்னட, பிரதாபவராளி, குந்தலவராளி, நாராயணகவுளை, கர்நாடக பெஹாக், அடாணா மற்றும் ஆந்தாளி.பெயரளவில் இவற்றைக் குறிப்பிட்டு சென்று விடாமல், ஒவ்வொரு ராகமும் தனக்குக் கொடுத்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அம்ருதா.ஒவ்வொரு ராகத்திற்கும், அவற்றின் ஆரோகணத்தையும் அவரோகணத்தையும், அவற்றின் ராகஸ்வரூபம் மனதில் ஓரளவிற்கேனும் குடியேறும்படி பாடிக் காண்பித்து, தான் கற்றவற்றை நம்மிடம் வஞ்சனையில்லாமல் பகிர்ந்து கொண்டார் அம்ருதா முரளி.'நாத இன்பம்' அமைப்பு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE