பெரும்பாலும் கிராம பகுதிகளில், மத்திய அரசின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக கூறி, பொங்கல் பரிசு பணம், 2,500 ரூபாயை பிடித்தம் செய்து கொள்வதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.
- தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி
'அப்படி ஒன்றும் நடந்ததா தெரியலியே... சும்மா, 'கொளுத்தி'ப் போட்டு பார்க்குறீங்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டி.
விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும். நகையை அடைமானம் வைத்து, மின் கட்டணம் செலுத்தியதை அறிந்த நான், அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் விளக்கினேன். இதனால், 1989ல், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்ட உத்தரவை அவர் பிறப்பித்தார்.
- தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்
'இப்போது, ஹிந்து, விவசாயி, எம்.ஜி.ஆர்., ஆகிய சொற்கள் தான், அரசியல்வாதிகளால் அதிகம் பேசப்படும் வார்த்தைகளாக உள்ளன...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேச்சு.
முதல்வர் பழனிசாமிக்கு கொடுக்கும் மனம் அதிகம். அவர் அமர்ந்துள்ள நாற்காலியை, தி.மு.க.,வினர் அசைக்க பார்க்கின்றனர்; ஆனால், அவர் கம்பீரமாக இருக்கிறார்.
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

'கொடுக்குற மனதை வைத்து, நாற்காலியையும் கொடுத்திடப் போறாரு... பார்த்துக்குங்க...' எனச் சிரிக்கத் தோன்றும் வகையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு.
தி.மு.க.,வினர், கந்தபுராண பாடல் வரிகளை மாற்றி, தேர்தல் பிரசார பாடலாக மாற்றியுள்ளனர். இதனால், ஆன்மிக நம்பிக்கை கொண்ட, பெரும்பாலான ஹிந்து சமுதாய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கு பிடிக்காத ஆன்மிக நெறிகொண்ட பாடல் வரிகளை எதற்காக பயன்படுத்த வேண்டும் என, கோபம் ஏற்பட்டுள்ளது.
- திருக்கோவில் ஆன்மிக பேரவை அமைப்பாளர் ராமகிருஷ்ணன்
'இதில், அதிர்ச்சிக்கு என்ன இருக்கிறது... கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கந்தபுராணத்தை பாடுகின்றனர் என பாராட்ட வேண்டியது தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், திருக்கோவில் ஆன்மிக பேரவை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை.
தி.மு.க., இரண்டாக உடையப் போகிறது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குடும்ப சண்டையை முடித்து விட்டு வரவே, அடுத்த தேர்தல் வந்து விடும்.
- அமைச்சர் உதயகுமார்
'மு.க.அழகிரி - ஸ்டாலின் சண்டையை சொல்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு.
ஜெ., காலத்தில் இருந்தே, பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தற்போது, கொரோனா ஊரடங்கால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், முதல்வர் இ.பி.எஸ்., 2,500 ரூபாயுடன், பொங்கல் தொகுப்பை வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் சிலர் கொதிப்படைந்துள்ளனர்.
- அமைச்சர் தங்கமணி
'ரூ.2,500 பெற்றவர்கள், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு விடுவர் என நினைத்து அலறுகின்றனரோ...' என, அப்பாவித்தனமாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE