ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தை இன்று (ஜன.,7) காலை, 9:00 மணிக்கு, பன்னீர் செல்வம் பார்க் சந்திப்பில் துவங்க உள்ளார். அவருக்கு மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து, பன்னீர் செல்வம் பார்க் சந்திப்பில் உள்ள, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், பெருந்துறை ரோட்டில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., ஜெ., சிலைகளுக்கு மாலை அணிவித்து, அங்கு இளம் பாசறையினரின் கூட்டத்தில், தேர்தல் தொடர்பாக ஆலோசனை வழங்க உள்ளார். இதையடுத்து, வீரப்பன் சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், சித்தோட்டில் மக்களை சந்தித்து விட்டு, வில்லரசம்பட்டியில் உள்ள, தனியார் ரிசார்ட்டில் தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர், சாணார்பாளையத்தில் சமுதாய மக்களை சந்தித்து விட்டு, ஊத்துக்குளி செல்கிறார். பெருந்துறை ஸ்ரீபிளஸ் மகாலில் கைத்தறி மற்றும் சக்தி தறி தொழில் முனைவோரையும், முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கிறார். இதையடுத்து, ஓடாநிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, மஞ்சள் விவசாயிகளை சந்திக்கிறார். நவரசம் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் உரையாடுகிறார். இரவு, 7:15 மணியளவில் பெருந்துறையில், பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE