பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, குரோம்பேட்டை, லட்சுமிநகர், இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜி.ராகவன்,83.'காயத்ரி டிரஸ்ட்' என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், 37 ஆண்டுகளாக, அனாதை உடல்களை தகனம் செய்து, மனித நேயம் மறையவில்லை என்பதை உணர்த்தி வருகிறார்.
இச்சேவையில் 1984 முதல் ஈடுபட்டு வரும் ராகவன், இதுவரை 700க்கும் அதிகமான உடல்களை தகனம் செய்துள்ளார். சமீபகாலமாக எஸ்.ரவீச்சந்திரன், 74, என்பவரும், இச்சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். இந்த அமைப்பினர், அனாதை உடல்களை எடுத்து வர, மூன்று அமரர் ஊர்திகளை சொந்தமாக வைத்துள்ளனர். முதியோர் இல்லம், காவல் நிலையங்களில் இருந்து, 'காயத்ரி டிரஸ்ட்' அமைப்புக்கு வரும், ஆவணங்களை சரிபார்த்த பின், தகனம் செய்யும் பொறுப்பை ஏற்கின்றனர்.

அந்த உடல்களை அருகேயுள்ள தகன மேடைக்கு எடுத்து சென்று, முறையான சம்பிரதாயங்களுடன் தகனம் செய்வர். ஒரு உடலை தகனம் செய்ய, 1,700 ரூபாய் செலாவாகும். அந்த பணத்தை, 'காயத்ரி டிரஸ்ட்'அமைப்பே ஏற்றுக்கொள்கிறது. 'கொரோனா' பரவல் காலத்திலும் பல அனாதை உடல்களை தகனம் செய்துள்ளனர்.

ஜி.ராகவன் கூறுகையில், அனாதை உடல்களை அடக்கம் செய்வது என்பது எனக்கு கிடைத்துள்ள பாக்கியம். உயிர் உள்ளவரை, இச்சேவையில் ஈடுபடுவேன் என்றார்.