கரூர்: ''கோவில் நிலங்கள் பட்டா போட்டு வழங்கப்படும் என பேசுவது, நீதிமன்ற அவமதிப்பாகும்,'' என, திருத்தொண்டர்கள் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கரூரில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது, ஐந்தே கால் லட்சம் ஏக்கர் நிலம், திருக்கோவில்களுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு, நான்கே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிபோய்விட்டது. ஏற்கனவே, ஐந்து லட்சம் ஏக்கர் நிலம் பறிபோயுள்ளது. அதை மீட்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து, அதிகாரிகளுக்கே தெரியவில்லை. பல ஆவணங்களை காணவில்லை. சில ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்த பட்டவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அறநிலைய துறை என்ற பெயர், புரோக்கர் துறையாக மாறியுள்ளது. அறநிலையத்துறை சொத்துகள் அனைத்தும் மீட்கப்பட்டு, அதில் வரும், 5 சதவீத வருமானத்தை கொண்டு, ஆதரவற்றவர்களுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகளுக்காக செலவிட முடியும். அறநிலையத்துறை சொத்துகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, அந்த துறை அதிகாரிகளுக்கும், அரசுக்கும் உண்டு. அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திருக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, வேறு யாருக்கும் பட்டா வழங்க முடியாது. அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், கோவில் சொத்துகளை பட்டா போட்டு வழங்கப்படும் என பேசுவது, நீதிமன்ற அவமதிப்பாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE