கரூர்: கரூரில், கல்லூரி மாணவியை காதலித்த, வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, மாணவியின் பெரியப்பா உள்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் மகன் ஹரிஹரன், 22; சலூன் கடை நடத்தி வந்தார். இருவரும், அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுமியும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில், ஹரிஹரனை பேச்சு வார்த்தை நடத்த, சிறுமியின் உறவினர்கள் நேற்று மதியம், 2:00 மணிக்கு, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு வர சொல்லியுள்ளார். இதனால், ஹரிஹரன் கோவில் முன் சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்ற சிறுமியின் தந்தை வேலன், பெரியப்பா சங்கர், சித்தப்பா முத்து, மாமன்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி ஆகியோர், ஹரிஹரனிடம், காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். அதற்கு, ஹரிஹரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சங்கர், ஹரிஹரனை கத்தியால் குத்தியுள்ளார். மற்றவர்கள், அடித்து உதைத்துள்ளனர். பலத்த காயமடைந்த ஹரிஹரன், அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். சங்கர், கார்த்திகேயன், வெள்ளைசாமி ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்தனர். வேலன், முத்து ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE