நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், தொடர்ந்து ஏற்படும் மர்ம வெடிச் சத்தத்தால், நிலம், கதவு, ஜன்னல் அதிர்ந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 4 மதியம், 12:45 மணிக்கு, பயங்கர சத்தம் எழுந்தது. அப்போது, லேசான நில அதிர்வும் காணப்பட்டது. வீடுகளில் இருந்தும், வணிக நிறுவனங்களில் இருந்தும் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இந்த, பயங்கர வெடிச் சத்தம், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர், ப.வேலூர், ராசிபுரம், கரூர் மாவட்டம், வாங்கல் என, சுற்று வட்டாரத்தில், 25 கி.மீ., தூரத்துக்கு நில அதிர்வுடன் உணரப்பட்டது. ராசிபுரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில், ஜன்னல் கதவுகள் அதிர்ந்தன. திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தால், மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில், நேற்றும், மர்ம வெடிச் சத்தம் மாவட்டம் முழுவதும் கேட்டது. காலை, 9:50 மணிக்கு, வானில் பயங்கர வெடிச் சத்தம் எழுந்தது. வீட்டுக்குள் இருந்த மக்கள், அதிர்ச்சியடைந்து வெளியே வந்து வானத்தை பார்த்தனர். ஆனால், சத்தத்துக்கு இதுவரை விடை கிடைக்காமல், புரியாத புதிராக இருப்பதால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் மெகராஜ் கூறியதாவது: இந்த சத்தத்தின் காரணமாக, ஜன்னல் கதவுகளும் அதிர்ந்தன. இது, சூப்பர் சானிக் விமானம் சென்றால், இதுபோன்ற சத்தம் கேட்கும். தஞ்சை விமானப்படை தளத்திலிருந்து, ஒரு விமானம் செல்கிறது. அதிவிரைவு விமானம், ஒலியின் வேகத்துக்கு மேல் செல்வதால், அந்த சத்தம் கேட்கிறது என்ற தகவல் உள்ளது. அவற்றை உறுதிப்படுத்த வேண்டும். ஒலியின் வேகத்தை தாண்டும்போது, அந்த சத்தம் வருவதாகவும் கூறப்படுகிறது. கரூரில் இருந்து கொல்லிமலை வரை கேட்கிறது. 'கிளவுடு பஸ்ட்' ஆனால், அந்த சத்தம் வரும். நம் மாவட்டத்தில் மழை இல்லை. ஒலியின் வேகத்தைவிட அதிகமாக செல்லக்கூடிய அதிவிரைவு விமானம்தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE