பெங்களூரு: கிராம பஞ்சாயத்து தேர்தலில் எதிர்பார்ப்பை மீறி வெற்றி பெற்ற, ஆளுங்கட்சியான பா.ஜ., அதே உற்சாகத்துடன், அடுத்து வரும், மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
மஸ்கி, பசவகல்யாணா சட்டசபை தொகுதிகள் மற்றும் பெலகாவி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம், விரைவில் தேதி அறிவிக்க உள்ளது. அதன்பின் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கு, தேதி நிர்ணயிக்கப்படும். இடைத்தேர்தல், கிராம பஞ்சாயத்து தேர்தல் என, நடந்து முடிந்த தேர்தல்களில், பா.ஜ., வே எதிர்பார்க்காத அளவுக்கு, வெற்றி கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள, பா.ஜ., அடுத்த தேர்தல்களுக்கு, கட்சியை பலப்படுத்துகிறது. பேரூராட்சி அளவில், கட்சியின் வேரை பலப்படுத்துவதில், கவனம் செலுத்தியுள்ளது.
இதற்காக, பெங்களூரு, கலபுரகி, பெலகாவி, ஹூப்பள்ளி, தார்வாட், பல்லாரி, தாவணகரே, மைசூரு, மங்களூரு, சிக்கபல்லாபூரில், 'ஜனசேவக்' மாநாடு நடத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இம்மாநாடுகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட, முக்கிய தலைவர்களுக்கு, அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது.
'ஜன சேவக்' யாத்திரை மூலம், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கு, பா.ஜ., தயாராகிறது. தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தேர்தலுக்கு தயாராக்கி, வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, திட்டங்களை வகுத்துள்ளது.இவ்விஷயத்தில், காங்கிரஸ், ம.ஜ.த.,வை பின்னுக்கு தள்ளி, பிரசார திட்டங்களை, பா.ஜ., தயாரிக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநாடு நடத்தப்படும். முதல்வர் எடியூரப்பா, மைசூரின் சாமுண்டீஸ்வரிக்கு, பூஜை செய்த பின், மாநாட்டை துவக்கி வைப்பார்.மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலும் கூட, பா.ஜ.,வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதிலும் அதிக இடங்களை கைப்பற்றினால், சட்டசபை தேர்தலுக்கு உதவியாக இருக்கும் என்பது, பா.ஜ.,வின் எண்ணமாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE