வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய கலவரம், 4 பேர் பலி சம்பவம், உலகளவில் பேசப்பட்டதால் டிரெண்ட் ஆனது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். தோல்வியை ஒப்புக் கொள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார். ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக அவர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.
அதேசமயம் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர். எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நடைபெற்றால் ஜோ பைடன் வெற்றியாளர் என தீர்மானிக்கப்படுவார். இதை தடுக்கும் விதமாக டிரம்ப் ஆதரவாளர்கள் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரமாக மாறிய இந்த நிகழ்வில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பானது. இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் உலகம் முழுக்க எதிரொலித்ததன் காரணமாக சமூகவலைதளமான டுவிட்டரில் உலகளவில் டிரெண்ட் ஆனது. பெரும்பாலும் இந்த சம்பவத்தை கண்டித்தும், இதன் பின்னணியில் டிரம்ப் மட்டுமே இருப்பதாக குற்றம்சாட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
''நல்லவர் போல் அமைதி காக்கணும், வன்முறை செய்யாதீர்கள் என கூறும் டிரம்ப், பின்னணியில் இது போன்ற வேலைகளை செய்வது அழகல்ல'' என பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். இதனால் டுவிட்டரில் #USCapitol, #Dolandtrump, #Trump உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE