வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை இன்னமும் ஏற்காமல் இருக்கும் டிரம்புக்கு மனநிலை சரியில்லை என்று ஜனநாயகக் கட்சியினர் கூறினர். 25-வது சட்ட திருத்தம் மூலம் அதிபர் பதவியிலிருந்து அவரை நீக்க துணை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்க பாராளுமன்றம் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்க இருந்தது. ஆனால் கடைசி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறார் டிரம்ப். டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரம் ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு கும்பல் பாதுகாப்புகளை கடந்து அவைக்குள் நுழைய முயன்றது. அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் டிரம்ப் ஆதரவாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பல காயமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து வாஷிங்டனில் 15 நாட்களுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறையை தூண்டும் விதமாக நடந்து கொண்டதாக டிரம்பை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கியுள்ளன. டுவிட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில் டிரம்ப் அவுட் ஆப் கன்ட்ரோலில் இருப்பதாக அவரது சொந்த கட்சித் தலைவர்களே ஊடகங்களில் கூறியுள்ளனர். இதனால் ஜனநாயக கட்சியினர் 25-வது சட்டதிருத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.

இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது பற்றி டிரம்ப் அமைச்சரவை ஆலோசித்து வருவதாக தகவல். இது அமலுக்கு வந்தால், அதிபர் ஒருவர் அவரது அலுவலக அதிகாரங்களையும், கடமைகளையும் நிறைவேற்ற தவறியதாக கூறி துணை அதிபர் மற்றும் அமைச்சரவையால் பதவி நீக்கப்படுவார். இது தொடர்பாக பாராளுமன்ற நீதித்துறை குழுவில் உள்ள ஜனநாயக கட்சியினர் துணை அதிபர் மைக் பென்ஸ்க்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் டிரம்ப் மனநிலை சரியில்லை என்றும், இன்னமும் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் உள்ளார் என்றும் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE