குன்னுார் : குன்னூரில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி, மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை தூதூர்மட்டம் அருகே கிரேக்மோர் எஸ்டேட் தனியார் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய ஜார்கண்ட் மாநில தொழிலாளி அசோக் பகத், 27- மனைவி சுமதி குமாரி, 24 மகன் அபய், 8. மகள் ரேஷ்மா 4. காலை வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்த தொழிலாளி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.தொடர்ந்து ஏ.டி.எஸ். பி. சங்கு, டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் விசாரணை துவக்கப்பட்டது. இதில், வீட்டில் சுமதியின் கழுத்தறுத்து கொலை செய்ததும், ரேஷ்மாவை தொட்டியில் வீசி கொன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அருகில் பூட்டியிருந்த வீட்டின் பின்பகுதி உடைக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளே சென்று பார்த்தபோது, மகன் அபய் தலையில் அடித்து கொன்று , அசோக் பகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 21ம் தேதி இந்த வீட்டின் அருகே உள்ள ஜார்கண்ட் தொழிலாளி லட்சுமணன் என்பவரின் 8 வயது மகள் காணாமல் போய் 17 நாட்கள் ஆகியும் கிடைக்காத நிலையில், தற்போது மற்றொரு தொழிலாளியின் தற்கொலை மற்றும் கொலை சம்பவம், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொழிலாளர்களால் அச்சம்
இது தொடர்பாக ஊர் மக்கள் கூறுகையில், 'குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் நீலகிரி எஸ்டேட்களில் பணிபுரிகின்றனர். இதுவரை இது போன்ற சம்பவம் நடக்காத நிலையில் முதல் முறையாக வட மாநில தொழிலாளர்களால் நடந்துள்ளது. " என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE