'சங்கம் எங்கு வந்தாலும், பங்கம் தான் என்பது இந்த விவகாரத்திலும் உறுதியாகிறதே...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி: உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே பணிகள் தொடங்கின. சில சங்கங்கள், இது நாள் வரை பேசாமல் இருந்து, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்தை பயன்படுத்தி, அரசாணைப்படி நிதி கிடைக்கவில்லை என சொல்லி இருக்கின்றனர்.
'கொரோனா ஒழிந்ததும், ஊரடங்கும் மறைந்து விடும்; அது வரை சற்று பொறுத்திருங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில, செயலர் முத்தரசன் பேட்டி: தற்போது, அனைத்து தளர்வுகளும் கொடுக்கப்பட்ட பின், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்குத் தான், ஊரடங்கு உத்தரவு பயன்படுத்தப்படுகிறது. உடனடியாக, இதை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்.
'இப்படி எல்லாரும் ஆதரவு கேட்டு விட்டால், அவர், இமயமலைக்கு சென்று விடுவார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: நடிகர் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கும் முடிவைத் தான் கைவிட்டுள்ளார். ஆன்மிக அரசியலை கைவிடவில்லை. ஆன்மிக அரசியலை பின்பற்றுபவர்களுக்கு, அவர் ஆதரவளிப்பார். எனவே, சட்டசபை தேர்தலில், ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம்.
'அமித் ஷா செல்லும் மாநிலங்களில் எல்லாம், அரசியல் மாற்றம் நிகழ்கிறதே...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா வருவதால், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு விடாது. பா.ஜ., நிர்ப்பந்தத்தால், ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்தார்; அரசியல் காரணங்களால் பின்வாங்கியுள்ளார்.
'நியாயம் தான். ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் பாரபட்சம் கூடாது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: போக்குவரத்து துறையில், 2019 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும், ஓய்வூதிய பலன்களை வழங்கிவிட்டு, அடுத்த நான்கு மாதங்களில், ஓய்வு பெற்றவர்களை காத்திருக்க வைப்பது சரியானதல்ல.
'கடைசியில், அவர்களும், கந்தனிடம் தான் தஞ்சம் அடைந்துள்ளனர் எனக் கருதி, விட்டு விடுங்களேன்...' என, கூறத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேட்டி: ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும், தி.மு.க.,வினர், கந்தபுராணத்தையும் கொச்சைப்படுத்தி விட்டனர். இறைவன் மீது பாடிய பாடல்களை திரித்து, தங்களது பிரசாரப் பாடலாக மாற்றியுள்ளனர்; இது, மிகவும் கண்டனத்துக்குரியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE