கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு தயாராக இருக்கும்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனெகா' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, கொரோனாவுக்கு எதிரான, 'கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், நம் நாட்டில் மேற்கொள்கிறது.
வரைவு அறிக்கை
தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது.இந்த இரு தடுப்பூசிகளுக்கும், மத்திய அரசு சமீபத்தில் அவசரகால அனுமதியளித்தது.இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.
இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஆந்திரா, அசாம், பீஹார், சத்தீஸ்கர், டில்லி, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சரக்கு கையாளும் இடங்களுக்கு, தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
மீதியுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அரசு மருந்து குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா தடுப்பூசிகளை பெறவும், அதை மக்களுக்கு வினியோகிக்கவும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாராக இருக்க வேண்டும். மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை வினியோகிப்பது பற்றிய விபரங்களை, வழிமுறைகளை, பின், தெரிவிக்கிறோம். இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி வினியோகம் குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இதற்கான அடுத்த கட்டப் பணிகளில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து, தீவிரமாக இறங்கியுள்ளன.சுகாதாரத்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து ஆகிய இரண்டு அமைச்சகங்களின் அதிகாரிகள், கடந்த இரண்டு வாரங்களாகவே, தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பது, இதற்கான இடங்களை கண்டறிவது, தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் ஆராயப்பட்டன.அவற்றுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைக்கப்பட்டு, ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கும் சேர்த்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அவற்றின் பணிகள் முடிவடைந்துவிட்டன.அந்த வழிமுறை திட்டத்தின்படி, இன்னும் ஒரு சில நாட்களுக்குள் தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் செல்லும் பணிகள் துவங்க உள்ளன.
விமான நிலையங்கள்
மஹாராஷ்டிராவின் புனே நகரில் இருந்து, தடுப்பூசி மருந்துகளை, நாட்டின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காகவே, புனே விமான நிலையத்தின் மொத்த கட்டுப்பாடும், சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரவுள்ளது. தடுப்பூசி எடுத்துச் செல்லும் பணிகளில், பயணியர் போக்குவரத்துக்கான விமானங்களே ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த வரைவு திட்டத்தின்கீழ், நாடு முழுதும், 41 விமான நிலையங்கள், அடையாளம் காணப் பட்டு உள்ளன.தென் மாநிலங்களுக்கு, சென்னை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் இருந்து, தடுப்பூசி வினியோகிக்கப்பட உள்ளது.கிழக்கு மாநிலங்களுக்கு, கோல்கட்டா, கவுஹாத்தி விமான நிலையங்களில் இருந்தும், வட மாநிலங்களுக்கு புனே மற்றும் கர்னுால் விமான நிலையங்களில் இருந்தும் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இந்த விமான நிலையங்கள் தான்,தடுப்பூசி மருந்துகளை அருகிலுள்ள பகுதிகளுக்கு வினியோகம் செய்யும் மையங்களாக செயல்படப் போகின்றன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE