கொழும்பு:இலங்கை சென்றுள்ள, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் தமிழ் தலைவர்களை சந்தித்து, தேசிய நல்லிணக்கத்தின் ஒரு பகுதியாக, வளர்ச்சி, அதிகார பகிர்வு மற்றும் மாகாண சபைகளின் பங்கு தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக, இலங்கை சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து, இரு தலைவர்களும் விவாதித்தனர்.அதன் பின், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனேவும், ஜெய்சங்கரும் இணைந்து, செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, 'சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இலங்கை கடமைப்பட்டுள்ளது' என, ஜெய்சங்கர் தெரிவித்தார். தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும், 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்தும்படி, இலங்கை அரசிடம் வலியுறுத்தினார்.இதன்பின், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார்.
அவருடனான சந்திப்பு, மிக பயனுள்ளதாக இருந்ததாகவும், மீன்வளத்துறையில், இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாகவும், ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.இந்த சந்திப்புக்கு பின், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள், விரைவில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்ப்பதாக, ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களை, நேற்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளதாவது:இலங்கையைச் சேர்ந்த தமிழ் தலைவர்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.அவர்களுடன், தேசிய நல்லிணக்கத்தின் ஒரு பகுதியாக, வளர்ச்சி, அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாண சபைகளின் பங்கு தொடர்பான பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில், ஒன்பது மாகாண சபைகள் உள்ளன. 1987ல் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை ஒழிக்க, ஆளும் இலங்கை மக்கள் கட்சி முயன்று வருகிறது.இந்த நேரத்தில், தமிழ் தலைவர்களுடனான, அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கவர்னர் வரவேற்பு
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ் சமூகம் குறித்து தெரிவித்த கருத்துகளை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றுள்ளார்; அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:இலங்கையில் உள்ள, தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மீது, இந்திய அரசின் அக்கறையை குறிக்கும், ஒரு முக்கியமான அறிக்கை இது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், 13ம் சட்ட திருத்தம் குறித்த, இந்தியாவின் நிலைபாட்டை மிகத் தெளிவாக கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை, தமிழக மக்கள் வரவேற்பது உறுதி. அமைச்சர் அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும், அயராத முயற்சிகளை பிரதிபலிப்பதாக உள்ளது.இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE