லாகூர்:பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசாருக்கு எதிராக, கைது, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது.இங்கு செயல்படும், ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர் - இ - தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள், கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன.
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவர்கள், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பஞ்சாப் மாகாண போலீசாரின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, குஜ்ரன்வாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பயங்கரவாத தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது போன்றவற்றில், மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது.'எனவே, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.
இதையடுத்து, நீதிபதி நடாஷா சுப்ரா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஜெய்ஷ் - இ - முகமது தலைவர் மசூத் அசாருக்கு எதிராக, கைது வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. அவரை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE