புதுடில்லி:முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட, கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவை கலைக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, 25க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜோ ஜோசப், ஷீலா கிருஷ்ணன் குட்டி, ஜெஸ்ஸிமோள் ஜோஸ் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப் பட்ட கண்காணிப்புக் குழுவால் ஏற்படுத்தப்பட்ட துணைக் குழுவை கலைக்க வேண்டும். அணை பாதுகாப்பு பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழு, அதன் பணியை, அதை விட குறைந்த அதிகாரம் உடைய குழுவுக்கு பகிர்ந்தளிக்கக்கூடாது. பிரதான கண்காணிப்புக் குழுவே, முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பாக, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில், ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை, வரும், 25க்கு, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE