வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை!

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (18)
Advertisement
வாஷிங்டன் அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியபோது, வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை நடந்தது. அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு கபளீகரம் செய்தனர். அப்போது நடந்த பயங்கர கலவரத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இவ்வளவு
வாஷிங்டன், வன்முறை, பார்லிமென்ட், டிரம்ப், ஜோ பைடன், கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ், தலைவர்கள், கண்டனம், அதிபர், அமெரிக்கா, உலக  தலைவர்கள்

வாஷிங்டன் அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியபோது, வாஷிங்டனில் வரலாறு காணாத வன்முறை நடந்தது.

அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு கபளீகரம் செய்தனர். அப்போது நடந்த பயங்கர கலவரத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இவ்வளவு நடந்ததற்கு பின், அதிபர் பதவியை, ஜோ பைடனுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில், அதிகார மாற்றத்துக்கு, டொனால்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.


அதிகார மாற்றத்துக்கு ட்ரம்ப் சம்மதம்

அமெரிக்க அதிபர் பதவிக்கு, கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றார். 'பாப்புலர் வோட்' எனப்படும், மக்களின் நேரடி ஓட்டுகளில், 70 லட்சம் வித்தியாசத்தில், குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்பை, அவர் வென்றார். 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாணப் பிரதிநிதிகளின் ஓட்டுகளில், 306 - 232 என்ற அடிப்படையிலும், பைடன் வென்றார்.

வரும், 20ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். துணை அதிபராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்; இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகளை, அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் மோசடி நடந்ததாக அவர் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எலக்டோரல் காலேஜ் ஓட்டுகளை முறைப்படி எண்ணி, அதற்கு ஒப்புதல் அளித்து, அதிபர் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்காக, பார்லிமென்டின் கூட்டுக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை, எம்.பி.,க்கள் பங்கேற்றனர். எலக்டோரல் காலேஜின், 538 ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன்பின், செனட் சபையின் தலைவர் என்ற அடிப்படையில், துணை அதிபர் மைக் பென்ஸ், புதிய அதிபரை அறிவிக்க வேண்டும்.ஓட்டு எண்ணிக்கை துவங்கி, 12 ஓட்டுகள் எண்ணப்பட்டன. அனைத்தும், டிரம்புக்கு கிடைத்தவை.

அந்த நேரத்தில், கைகளில் இரும்பு தடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், டிரம்பின் ஆதரவாளர்கள் நுாற்றுக்கணக்கில், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்தனர்.ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், அவர்கள், பார்லிமென்ட் சபைகளின் கூட்டம் நடக்கும் அரங்கிற்குள் நுழைந்தனர்.போலீசார், அவர்களை தடுக்க முயன்றனர்.

இதற்கிடையே, துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அனைத்து எம்.பி.,க்களும், பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த உள்ளதால், முக கவசம் அணியும்படி அவர்களை போலீசார் வலியுறுத்தினர். இதன்பின், போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை வெளியேற்றினர். அதைத் தொடர்ந்து, பார்லிமென்ட் வளாகம், போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதற்கிடையே, பார்லிமென்ட் வளாகம் அமைந்துள்ள, கேப்பிடோல் ஹில்ஸ் பகுதியில், ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வாஷிங்டன் முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .டிரம்பின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க, போலீசார் சுட்டதில், ஒரு பெண் உயிரிழந்தார்.

இதைத் தவிர, கும்பலில் சிக்கி மூச்சுத் திணறி, ஒரு பெண் உட்பட, மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில், பலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு மணி நேரத்துக்கும் மேலாக, இந்த கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதனால், பார்லிமென்ட் கூட்டுக் கூட்டமும் நிறுத்தப்பட்டது.அதன்பின், இரவில் சபை மீண்டும் கூடி, ஓட்டெடுப்பு நடந்தது. அதில், ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது.


'கடந்த, 1812ல் நடந்த போரின்போது, பிரிட்டிஷ் படைகள், அமெரிக்க பார்லி., கட்டடத்துக்கு தீ வைத்தன. அதன்பின், பார்லி., வளாகத்தில் இதுவரை வன்முறை ஏதும் நடந்ததில்லை' என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக , 'அதிபர் தேர்தல் செல்லாது என்று, துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவிக்க வேண்டும். அதை, நம் ஆதரவாளர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

போராட்டத்துக்குப் பின், அவர் வெளியிட்ட செய்தியில், 'நீங்கள் எல்லாரும் மிகுந்த மன வேதனையில் இருப்பீர்கள் என்பது தெரியும். மோசடி தேர்தல் நடந்துள்ளது; அவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது. இருப்பினும், அனைவரும் அமைதியுடன் வீடு திரும்புங்கள்' என, டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, டிரம்ப் வெளியிட்ட பல செய்திகளை, 'டுவிட்டர், பேஸ்புக்' சமூக வலைதளங்கள் நீக்கின. மேலும், அவரது சமூக வலைதள கணக்குகளையும், அந்த நிறுவனங்கள் முடக்கி வைத்தன.
அதிகார மாற்றத்துக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல்


அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதற்காக, அமெரிக்க பார்லிமென்டின் இரு சபைகளின் கூட்டுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து, துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: எலக்டோரல் காலேஜ் அளித்த ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை, பார்லிமென்டின் இரு சபைகளின் கூட்டுக்குழு கூட்டம் ஏற்றுக் கொண்டது. 'நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்' என, பார்லிமென்ட் சான்றிதழ் அளித்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஜோ பைடன், வரும், 20ல், அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.


முன்னதாக, ஜோ பைடன் வெற்றி செல்லாது என, பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில் அறிவிக்கும்படி, துணை அதிபர் மைக் பென்சை, அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். மைக் பென்ஸ், அதை ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து, மனம் மாறிய டிரம்ப், வேறு வழியின்றி, பைடனுக்கு பதவியை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிவுகளை முற்றிலும் நிராகரிக்கிறேன். எனினும், 20ம் தேதி, அமெரிக்காவில் அதிகார மாற்றம் முறைப்படி நடக்கும். அமெரிக்க அதிபர் வரலாற்றில், மிகச் சிறந்த ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும், எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு, அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.


வேதனை!வாஷிங்டனில் நடந்த போராட்டங்கள், வன்முறைகள் வேதனை அளிக்கின்றன. அதிகாரத்தை ஒப்படைப்பது அமைதியாகவும், முறையாகவும் நடக்க வேண்டும். ஜனநாயகநடவடிக்கைகளை, சட்டவிரோத செயல்களால் சீரழிக்க முடியாது.
நரேந்திர மோடி
பிரதமர்


போராட்டத்தில் மூவர்ணக் கொடி!


அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், கேப்பிடோல் ஹில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், அமெரிக்க தேசியக் கொடியை கையில் வைத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏந்தியிருந்தார்; இது சமூக வலைதளத்தில் விவாதப் பொருளானது.

பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி.,யான, வருண், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 'அந்தப் போராட்டத்தில், இந்திய தேசியக்கொடி ஏன் இடம்பெற வேண்டும். இந்த வன்முறை போராட்டத்தை, இந்தியா எப்போதும் ஏற்காது' என, குறிப்பிட்டுள்ளார்.


இவாங்கா விஷமம்!


போராட்டத்தை கைவிடும்படி, டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியை, அவரது மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், 'அமெரிக்க தேசபக்தியாளர்கள், பாதுகாப்பை மீறுவதை ஏற்க முடியாது; வன்முறைகளை நிறுத்த வேண்டும்' என, அவர் குறிப்பிட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தேசப்பற்று உள்ளவர்கள் என்று அவர் குறிப்பிட்டதற்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பதிவை அவர் நீக்கினார்.


வன்முறை வெற்றி பெறாது!


வன்முறை சம்பவங்களுக்குப் பின், பார்லிமென்ட் மீண்டும் கூடியபோது, துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியதாவது:நடந்த சம்பவங்களுக்கு கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறேன். வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெற்றி பெறவில்லை. வன்முறை எப்போதும் வெற்றி பெறாது; சுதந்திரம் தான் வெற்றி பெறும். இது, எப்போதும் மக்களின் சபையாகவே இருக்கும். இந்த சபை மீண்டும் கூடியுள்ளது. இது, நம் ஜனநாயகத்தின் வலிமையை உலகுக்கு காட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


அதிகாரிகள்ராஜினாமா


பார்லி.,யில் நடந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து, டிரம்ப் நிர்வாகத்தின் பல முக்கிய அதிகாரிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாட் போட்டிங்கர், அதிபரின் மனைவி மெலனியா டிரம்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டிபானி கிருஷம், வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் சாரா மேத்யூஸ் ஆகியோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களைத் தவிர, வெள்ளை மாளிகையின் பல மூத்த அதிகாரிகளும், தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைடன் வேதனை!பார்லிமென்ட் வளாகத்தில்நடந்த வன்முறைக்கு பின், ஜோ பைடன், 'டிவி'யில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க ஜனநாயகத்தின் மீது, மிக மோசமான தாக்குதல் நடந்துள்ளது. நம் பார்லிமென்ட் தாக்கப்பட்டுள்ளது. நம் மக்கள் பிரதிநிதிகள், போலீசார், நாட்டுக்காக இதயப்பூர்வமாக உழைக்கும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது. பார்லி.,யில் நடந்த சம்பவங்கள், நம் நாட்டின் உண்மையான குணத்தை வெளிப்படுத்துவதாக அமையவில்லை. இது, அமெரிக்காவின் பாரம்பரியம் கிடையாது. சட்டத்தை சிலர் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல; சட்டத்தை மீறியவர்கள். இது இனியும் நடக்கக் கூடாது. பார்லி.,க்குள் அத்துமீறி நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, அதிகாரிகளை மிரட்டுவது, போராட்டம் அல்ல. இந்த உலகம் நம்மை பார்க்கிறது. ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கும் அமெரிக்காவில் இது நடப்பது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர், ஆவேசமாக கூறினார்.


உலக தலைவர்கள் அதிர்ச்சி


அமெரிக்க பார்லி.,யில் நடந்துள்ள வன்முறைக்கு, ஐ.நா., மற்றும் பல உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.

'வாஷிங்டனில் நடந்த சம்பவம் குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது போன்ற சமயங்களில், தங்கள் ஆதரவாளர்களை அமைதிப்படுத்த வேண்டியது, அரசியல் தலைவர்களின் கடமை என, அவர் குறிப்பிட்டுள்ளார்' என, அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியுள்ளார்.

ஐ.நா., பொது சபை, சர்வதேச பார்லிமென்ட் சங்கம், நேட்டோ, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கைக்கான அமைப்பு உள்ளிட்டவையும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பார்லி.,யில் நடந்த வன்முறைக்கு, பல உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

''ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாக விளங்கும் அமெரிக்காவில், அதிகாரப் போட்டியில் நடந்துள்ள வன்முறை, அவமானத்துக்கு உரியது,'' என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள செய்தியில், 'வாஷிங்டனில் நடந்துள்ள சம்பவம் அமெரிக்காவுக்கானது அல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஹைகோ மாஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் உட்படபல உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சீன துாதரகம், 'கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்' என, தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், துருக்கியும், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


எம்.பி.,க்கள் ஆவேசம்!வன்முறை சம்பவங்களுக்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையைச் சேர்ந்த, குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், கட்சி பாகுபாடு இல்லாமல், டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'டிரம்பை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக,அரசியல் சாசனத்தின், 25வது பிரிவைப் பயன்படுத்த, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சட்டப் பிரிவு, 50 ஆண்டுகளுக்கு முன், ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட போது அமல்படுத்தப்பட்டது.அதன்படி, ஒருவர் அதிபராக தொடருவதற்கு தகுதியில்லாத நிலையில், துணை அதிபர் மற்றும் அமைச்சரவை அல்லது பார்லிமென்ட் நியமிக்கும் குழுவின் பெரும்பான்மை முடிவுக்கு ஏற்ப, அதிபரை பதவியில் இருந்து நீக்க முடியும்.'இந்த சட்டத்தை பயன்படுத்தி, டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, பல, எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்க பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும், வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. 'அதிபர் டிரம்ப், நாட்டுக்கு ஒரு தொந்தரவு' என, அவை குறிப்பிட்டுள்ளன.

Advertisement
Dinamalar iPaper
Related Tags வாஷிங்டன் வன்முறை பார்லிமென்ட் டிரம்ப் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் மைக் பென்ஸ் தலைவர்கள் கண்டனம் அதிபர்


26ல் நடக்கும் டிராக்டர் பேரணிக்கு நேற்று ஒத்திகை?
26ல் நடக்கும் டிராக்டர் பேரணிக்கு நேற்று ஒத்திகை? (20)
முந்தய
முதல்வர் பழனிசாமிக்கு  தி.மு.க., ஸ்டாலின் சவால்
முதல்வர் பழனிசாமிக்கு தி.மு.க., ஸ்டாலின் சவால்(18)
அடுத்து
» உலகம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Subramanian - Chennai,இந்தியா
08-ஜன-202112:19:56 IST Report Abuse
S.Subramanian பெரிய அண்ணன் யு எஸ் ஏ . இவர்கள் மற்ற நாட்டு விவகாரங்களில் இனி எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு பஞ்சாயத்து பண்ண வர முடியும்?. வீட்டுக்கு வீடு வாசற்படி........
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
08-ஜன-202110:10:26 IST Report Abuse
Ellamman டோலான்ட் ட்ரம்ப் அவர்களின் உத்தம நண்பர் மோடி..அவருக்காக அமெரிக்க சென்று பிரச்சாரம் செய்தார்... அவர் வருகைக்காக அஹமதாபாத் நகரில் சுவர் எழுப்பி வளர்ச்சியை காட்டி கொரோன தடுப்பை தள்ளி வைத்தார்...அவருக்காக மாபெரும் கூட்டம் நடத்தினார் அவருடைய மாநிலத்தில்...உன் நண்பனை காட்டு நீ யார் என்பதை கூறுகிறேன் என்பது தான் நினைவுக்கு வருகிறது.... ஜாடிக்கு ஏற்ற மூடி...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
08-ஜன-202110:16:08 IST Report Abuse
Ellammanகுஜராத்தில் ஒருவர் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரமும் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே......
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
08-ஜன-202111:55:02 IST Report Abuse
R MURALIDHARANஅதையும் இதையும் ஒப்பிடமுடியாது....
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
08-ஜன-202113:54:31 IST Report Abuse
Ellammanஉண்மை தான்.. இங்கு உயிர் பலி அதிகம்.. அங்கு கம்மி... ஆனால்... இவரை பார்த்து கலவரம் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பார் என்று சந்தேகிக்கிறேன்......
Rate this:
Cancel
santha kumar - ruwi,ஓமன்
08-ஜன-202109:42:39 IST Report Abuse
santha kumar எழுதி வைத்துக்கொள்ளுங்கள் , இதே போல் இங்கும் நடக்கும், பிஜேபி என்ற கட்சி ஆட்சியை விட்டு போகும் பொழுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X