சென்னை : 'ஊழல் குறித்து, விவாதிக்க தயாரா?' என, முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர் சவால் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:என்னுடன் நேருக்கு நேர், ஊழல் பற்றி, விவாதிக்கத் தயாரா என, முதல்வர் இ.பி.எஸ்., சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்.
ஊழல்
அதற்கு முன் முதல்வர் இ.பி.எஸ்., சில நடவடிக்கைகளை செய்து முடிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, 'சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த, நெடுஞ்சாலைத் துறை ஊழல் மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்க தயார்' என, இ.பி.எஸ்., உத்தரவு வாங்க வேண்டும்.
'அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது, எதிர்க்கட்சி தலைவர் தொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குங்கள்' என, ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி, கவர்னரிடம் உடனே ஒப்படையுங்கள்.'வருமானத்திற்கு அதிக மான சொத்து குவித்ததாக, என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன்; விசாரணைக்கு உத்தரவிடுங்கள்' என, கவர்னருக்கு கடிதம் எழுதுங்கள்.
நீங்கள் ரெடியா?
அடுத்த நிமிடம், விவாதத்திற்கு தேதி குறியுங்கள். எந்த இடம் என, சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன்.உங்கள் தரப்பில் நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள்.முடிந்தால் பன்னீர்செல்வத்தையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். நான் ரெடி; முதல்வரே... நீங்கள் ரெடியா?இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE