சென்னை:'அம்மா மினி கிளினிக்குகளில், நிரந்தர அடிப்படையில் டாக்டர்களை நியமிக்க வேண்டும்' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்ற, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். அதில், டாக்டர்களுக்கு மாதத்திற்கு, 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு கோரி, போராடி வரும் நிலையில், அரசின் அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள பலமே, 18 ஆயிரம் டாக்டர்கள் தான் என்பதை நன்கு உணர்ந்தும், அவர்களின் பல ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு தயங்கி வருகிறது. இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள் நியமனம் என்பது, மற்ற மாநிலங்களுக்கு மோசமான உதாரணம்.
எனவே, மினி கிளினிக்குகள் மட்டுமின்றி, அரசு டாக்டர்கள் எப்போதும் நிரந்தர அடிப்படையில் தான் நியமிக்க வேண்டும்.அரசு டாக்டர்களின் ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி வருகிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE