சண்டிகர்: ஹரியானா - ராஜஸ்தான் இடையே சரக்கு ரயில் போக்குவரத்திற்காக, பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள, கிழக்கு சரக்கு ரயில் வழித் தடச் சேவையை, பிரதமர் மோடி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மிகப்பெரிய மாற்றம்இங்கிருந்து, ராஜஸ்தான்வரை, கிழக்கு சரக்கு ரயில் தடச் சேவை திட்டத்தின் கீழ், 'நியூ ரிவாரி - நியூ மடார்' ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, 306 கி.மீ., துாரத்திற்கு, சரக்கு ரயில் போக்குவரத்து தடம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று, பிரதமர் மோடி, இந்த பிரத்யேக சரக்கு ரயில் தடத்தை, நாட்டிற்கு அர்ப்பணித்தார். அத்துடன், ஹரியானாவின், நியூ அடெலி - ராஜஸ்தானின், நியூ கிஷன்கர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, உலகின் முதல் இரட்டை அடுக்கு சரக்கு பெட்டக ரயில் போக்குவரத்தையும், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:மத்திய அரசு, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்க நடத்தி வரும், மகா யாகத்தில் இன்று புதியதொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து திட்டம், 21ம் நுாற்றாண்டின், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவும். கடந்த, ஐந்து - ஆறு ஆண்டுகளாக மேற்கொண்ட கடினமான திட்டப் பணிகளில், இன்று மிகப்பெரிய பகுதி முடிவடைந்து, பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
புதிய நம்பிக்கை
கடந்த, 10 - 12 நாட்களில் கிழக்கு பிராந்தியத்தில், பிரத்யேக சரக்கு ரயில் சேவை உட்பட, பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும், 'கோவிஷீல்டு, கோவாக்சின்' என்ற இரு கொரோனா தடுப்பூசி மருந்துகள், அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தியா தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசிகள், ஒவ்வொரு குடிமகனுக்கும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளன. ஒவ்வொருவரும், சோர்வின்றி, இடையுறாத உழைப்பை நல்கினால், நாம் அனைவரும் வேகமாக முன்னேறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE