சென்னை:நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது கணவரின் ஜாமின் மனுவுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா, 29; இவருக்கும், ஹேம்நாத், 32, என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.தாமதம்நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து, இருவரும் தங்கினர். 2020 டிச., 9ல், ஓட்டல் அறையில், சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.
நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். தற்கொலைக்கு துாண்டியதாக, டிச., 14ல் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹேம்நாத் தாக்கல் செய்த மனு:சித்ராவை சந்தேகப்பட்டதாகவும், 'டிவி' தொடரில் நடிக்கக் கூடாது என, வற்புறுத்தியதாகவும், எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.போலீசால், பலிகடா ஆக்கப்பட்டு உள்ளேன். திருவேற்காடில் திருமண நிச்சயம் விமரிசையாக நடந்தது. என் பெற்றோர், 20 லட்சம் ரூபாய் செலவு செய்தனர்; மணமகளுக்கு, 35 சவரன் நகை அளித்தனர்.
சித்ராவின் தாய்க்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவர் திருமணத்தை தாமதம் செய்தார். சித்ரா வற்புறுத்தியதால், அக்., 19ல் பதிவு திருமணம் செய்தோம். பதிவு திருமணத்துக்கு பின், திருமண ஏற்பாடுகளை விரைந்து செய்வர் என, நம்பினோம்.திருமண செலவுக்கு பணம் ஏற்பாடு செய்வதில், பிரச்னை இருப்பதாக சித்ராவின் தாய் தெரிவித்தார். திருமணத்துக்கு, 5 லட்சம் ரூபாய் தான் ஏற்பாடு செய்ய முடியும் என்றார். அதனால், திருமண செலவுக்கு ஏற்பாடு செய்வதாக, என் குடும்பத்தினர் தெரிவித்தனர். அம்பத்துாரில் திருமண மண்டபத்துக்கு பதிவு செய்தோம். 2021 பிப்., 10 என, திருமண நாளை உறுதி செய்தோம்.
பொய் குற்றச்சாட்டு
எங்கள் குடும்பத்தினருடன், சித்ரா நெருக்கமாக பழகினார். இது, அவரது தாய்க்கு பிடிக்க வில்லை. மேலும், நாங்கள் வசதி படைத்தவர்கள் இல்லை என்பதிலும், அவரது தாய்க்கு வருத்தம் இருந்தது. திருமணத்தை நிறுத்த அவர் திட்டமிட்டார். இதை, என் தந்தையிடம், சித்ரா தெரிவித்தார். தாயாரின் செயலால், மனஅழுத்தத்தில் இருந்தார்.எனக்கும், சித்ராவுக்கும் தவறான புரிதல் எதுவும் இல்லை. சுமுகமான உறவு இருந்தது.
மூன்றாம் நபரிடம் வாங்கிய கடனை அடைக்க, 1.20 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து, சித்ராவின் வங்கி கணக்கில் டிபாசிட் செய்தேன்.ஆறு நாட்கள் விசாரணைக்கு பின், என்னை கைது செய்தனர். தற்கொலைக்கு துாண்டியதாக, பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி பாரதி தாசன் முன், விசாரணைக்கு வந்தது. மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு, வழக்கு மாற்றப்பட்டுள்ளதால், பதில் அளிக்க, போலீஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஜாமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்வதாக, சித்ரா பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, மனுவுக்கு பதில் அளிக்க, நீதிபதிபாரதிதாசன் உத்தரவிட்டார். விசாரணையை, வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE