சென்னை:பொங்கல் பண்டிகை கொண்டாட, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஆம்னி பஸ்களில் எதிர்பார்த்த அளவுக்கு, பயணியர் முன்பதிவு செய்யாததால், அதன் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை, வரும், 14ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து, சொந்த ஊர் செல்வோர், ரயில், அரசு பஸ், ஆம்னி பஸ்களில், ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்வர். ஆனால், கடந்தாண்டு முதல், கொரோனா தொற்று பரவலையடுத்து, பொதுப் போக்குவரத்தை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்.
பெரியளவில் இல்லை
இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்பட உள்ள ஆம்னி பஸ்களில், பெரியளவில் முன்பதிவு நடைபெறவில்லை. இது, பஸ் உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு, ஒரு மாதத்துக்கு முன்பே, 50 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும்.
ஒரு வாரத்துக்கு முன், பெரும்பாலான ஆம்னி பஸ்களில் முன்பதிவு முடிந்து விடும். மேலும், முன்பதிவு செய்பவர்களுக்கு, வெளிமாநில பஸ்களை, கூடுதல் வாடகைக்கு எடுத்து இயக்கும் சூழல் ஏற்படும்.ஆனால், இந்தாண்டு, கொரோனா பரவலால், இன்னும் பாதியளவு கூட முன்பதிவு நடக்கவில்லை.
இந்தாண்டு, வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால், புதன்கிழமை முதல் விடுமுறையாக உள்ளது.அதனால், அரசு ஊழியர்கள், திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுப்பு எடுத்து, ரயில், அரசு பஸ்கள், சொந்த வாகனங்களில் கிளம்பும் திட்டத்தில் உள்ளனர்.
விறுவிறுப்பு
பெரும்பாலான நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர், சொந்த ஊர்களிலேயே உள்ளனர்.திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுப்பு கிடைக்காத, தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமே, ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர். இன்னும் ஒரு வாரம் உள்ளதால், முன்பதிவு விறுவிறுப்படையும் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE