பொங்கல் பணம் கேட்டுமனைவி மீது தாக்குதல்
கல்லல்: கல்லல் அருகே மாலைகண்டான் ராஜ்குமார் மனைவி அன்னபூரணி 36. இருவருக்கும் 17 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இரு மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டாக பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ஜன.,4ம் தேதி மாலைகண்டான் ரேஷன் கடையில் அன்னபூரணி பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2500 வாங்கியுள்ளார். ரேஷன் கடைக்கு வந்த ராஜ்குமார் பொங்கல் பணம் ரூ.2500யை கேட்டு மனைவியை தாக்கியுள்ளார். காயமுற்ற அன்னபூரணியை காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கல்லல் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, மனைவியை தாக்கிய ராஜ்குமார் மீது வழக்கு பதிந்தார்.
வரதட்சணை: 4 பேர் மீது வழக்கு
சிவகங்கை: தேவகோட்டை அருகே கோட்டவயல் ராமகிருஷ்ணன் மகன் கணேஷ். இவருக்கும், இளங்குடி பிரியங்கா 25, விற்கும் இடையே 2019 மே 23ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 83 பவுன் நகை, வெள்ளி சாமான், ரொக்கம் ரூ.8 லட்சத்தை வரதட்சணையாக வழங்கினர். இந்நிலையில் 2020 ஏப்ரலில் இருந்து கூடுதலாக வரதட்சணை வாங்கிவரக்கூறி, பெண்ணின் கணவர் கணேஷ், அவரது தந்தை ராமகிருஷ்ணன், தாய் மல்லிகா, சகோதரர் பாண்டி முருகன் ஆகியோர் கொடுமை செய்துள்ளனர். மேலும், அவரை பெற்றோர் வீட்டிற்கு விரட்டியுள்ளனர். இது குறித்து சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுபடி சிவகங்கை மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, எஸ்.ஐ., பிரபா ஆகியோர் 4 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
வெளிநாடு அனுப்புவதாக ரூ.17.05 லட்சம் மோசடி
சிவகங்கை: வேலுார் மாவட்டம், ஆலங்குளம் பாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ் 25. இவர் வெளிநாடு செல்வதற்காக காரைக்குடி அண்ணாநகரில் போலி டிராவல்ஸ் நடத்தி வந்த விக்னேஷ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். 2019 ஜன.,11 ம் தேதி முதல் மே 27 ம் தேதி வரை அவரை குவைத் அல்லது மொரீசியசில் வேலை வாங்கிதருவதாக கூறி உறுதி அளித்துஉள்ளனர்.
அதைநம்பிய விக்னேஷ், காரைக்குடி போலி ஏஜன்ட் விக்னேஷ் அவரது நண்பர்களான திருவாடனை அபுபெக்கர், காரைக்குடி ஆனந்தராஜ், சீனிவாசன் மனைவி நந்தினி, அவரது மகன் ரத்தினபிரகாஷ் ஆகியோரிடம் வங்கி மற்றும் நேரடியாக ரூ.17.05 லட்சம் வரை வழங்கியுள்ளார். ஆனால், அவர்கள் அவரை ஏமாற்றும் நோக்கில் போலி விசா கொடுத்து மோசடி செய்துள்ளனர். வெளிநாடு சென்ற அவர் போலி விசா என தெரிந்து ஏமாற்றம் அடைந்தார்.
இது குறித்து போலி ஏஜன்ட் விக்னேஷ் அவரது கூட்டாளிகளிடம் கேட்டு பணத்தை தராமல் மோசடி செய்துஉள்ளனர். இது குறித்து பணத்தை இழந்த விக்னேஷ், சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுபடி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா, காரைக்குடியை சேர்ந்த விக்னேஷ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்தார்.
மணல் கடத்தல்--: 2 பேர் கைது
மதகுபட்டி: மதகுபட்டி அருகே கீழக்கோட்டையில் அனுமதியின்றி லாரியில்மணல் திருட்டு நடந்துள்ளது. கீழக்கோட்டை வி.ஏ.ஓ., பிரியா புகார் அளித்தார். மதகுபட்டி எஸ்.ஐ., நாச்சாங்காளை கீழக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, லாரியில் மணல் கடத்தி வந்த கத்தப்பட்டு மெய்யப்பன், புத்தடிபட்டி பிரகாஷ் 24, சொக்கநாதபுரம் கண்ணன், வீரக்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, மெய்யப்பன், பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
தரகருக்கு அரிவாள் வெட்டு
திருப்புத்துார்: திருப்புத்துார் அச்சுக்கட்டு தெரு கால்நடை தரகர் அமீர்பாட்சா 34. இவரை மற்றொரு தரகரான தி.புதுப்பட்டி மணிகண்டன் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அலைபேசியில் அழைத்துள்ளார். சிங்கம்புணரி ரோடு ஜங்சனில் நின்ற மணிகண்டனை பார்க்க சென்றார். தரகு பணப்பிரச்னையில் மணிகண்டன் வைத்திருந்த அரிவாளால், அமீர்பாட்சாவை வெட்டினார்.பலத்த காயமுற்றவரை திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் மணிகண்டன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE