சென்னை:தியேட்டர்கள், 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவசரமாக விசாரிக்க கோரியதை, உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.
தமிழகத்தில், 50 சதவீத இருக்கைகளுடன், தியேட்டர்கள் இயங்க அனுமதித்து, 2020 அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து, ஜன., 4ல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பிரபு என்பவர் தாக்கல் செய்த மனு:
பொது முடக்கத்தை நீட்டித்து, 2020 டிச., 3ல் பிறப்பித்த உத்தரவில், பொது மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காணும் பொங்கலை முன்னிட்டு, கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவதற்கு, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் துவங்கப்படாத நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
எனவே, தியேட்டர்களில், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த மனுவை, அவசரமாக விசாரிக்கக் கோரி, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்து, 'வழக்கம் போல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு வரட்டும்' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE