கோவை:கோவை, சேலத்தில் விடிய விடிய பெய்த மழையால் ஏரிகள் நிரம்பின.
கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சில நாட்களாக, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு துவங்கிய மழை, இடி, மின்னலுடன் அதிகாலை, 5:30 மணி வரை நீடித்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது:ஜன., மாதம் பெய்வதை, வழக்கமாக குளிர்கால மழை என்பர். இது, வடகிழக்கு பருவ மழையின் தொடர்ச்சியே. மேற்கு பசிபிக் கடல் மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்தால், மழை பெய்கிறது. வரும், 12ம் தேதி வரை மழை தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக கோமுகி, மணிமுக்தா அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் திறந்து விடப்படுகிறது. கோமுகி அணையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 2,133 கன அடி, மணிமுக்தா அணையில், 24 ஆயிரத்து, 713 கன அடி தண்ணீர், மணிமுக்தாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
300 ஆடுகள் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருத்தாப்பிள்ளை, பழனி, அஞ்சலை. மூவரும் மல்லாபுரம் கிராம எல்லையில், 300க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். இரவு, பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை, கல்வராயன் மலைப் பகுதியில், கன மழை கொட்டியது. கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்று நீர், ஓடை வழியாக பெருக்கெடுத்து, தண்ணீர் வெளியேறியது. ஓடைக்கு அருகில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சில ஆடுகள் மற்றும் குட்டி ஆடுகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மற்ற ஆடுகள், தண்ணீரில் மூழ்கி இறந்தன.
ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு, உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வருவாய் துறையினர், விசாரணை செய்தனர். 75 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த, 225 ஆடுகள் மூழ்கி இறந்ததும் தெரிந்தது.
சேலம் மாவட்டம், ஆத்துார், அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணி வரை, பரவலாக மழை பெய்தது. இரவு, 8:00 மணிக்கு மேல், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை, கன மழை பெய்தது. தம்மம்பட்டியில், 8 செ.மீ., மழை பதிவானது.
நிரம்பிய ஏரிகள்
ஆத்துார், கெங்கவல்லி பகுதிகளில் பெய்த கன மழையால், நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஆத்துார் வழியாக செல்லும் வசிஷ்ட நதியில் நீர்வரத்து அதிகரித்துஉள்ளது. விடிய விடிய பெய்த மழையால், ஆறு, ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE