கிருஷ்ணகிரி:போலி சான்றிதழ் வழங்கி, 21 ஆண்டுகள் பணியில் இருந்த அரசு பள்ளி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52; இவர், ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளதாக சான்றளித்து, 1999ல் அரசு பள்ளியில், ஆசிரியராக சேர்ந்தார். காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டல்லிபுதுார், அரசு துவக்கப் பள்ளியில் பணியில் இருந்தார். போலிச் சான்றிதழ் கொடுத்து, பணி நியமனம் பெற்றதாக, 2019ல் குண்டலப்பட்டியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார்.
அப்போதைய கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., முருகன் விசாரணை நடத்தினார்.இதில், ராஜேந்திரன், பணம் கொடுத்து போலியாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ் பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக, ஏமாற்றியது தெரிந்தது.
இது குறித்து, 2020 அக்டோபரில், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., கலாவதி, எஸ்.பி., பண்டிகங்காதரிடம் புகார் அளித்தார். காவேரிப்பட்டணம் போலீசார், தலைமறைவான ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, காவேரிப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE