திண்டுக்கல் : ஒட்டன்சத்திரத்திலிருந்து கரூர் நோக்கி பாயும் நங்காஞ்சி எனும் நல்காசி ஆறு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியதோடு நீர் வளம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே மேற்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகியாகும் நங்காஞ்சியாறு, பரப்பலாறு அணையிலிருந்து நீரை சுமந்து கொண்டு விருப்பாச்சி, ஒட்டன்சத்திரம், இடையகோட்டை, வேடசந்தூர் வழியாக கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது.தலையூற்று அருவியில் தொடங்கும் இந்த ஆறு 5000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இதற்கு இடையில் பல குளங்களுக்கும், பல கிராமங்களுக்கும் நீராதாரமாகவும் விளங்குகிறது.
முத்து பூபாலசமுத்திரம், பெருமாள்குளம், காவிரிஅம்மாபட்டி குளம், சடையன்குளம், செங்குளம், கருங்குளம், பறைக்குளம், ஜவ்வாதுபட்டி குளம் என பல உள்ளன. இவற்றுக்கு செல்ல கால்வாய் அமைத்து ஒரு குளம் நிரம்பியவுடன், உபரிநீர் மீண்டும் நங்காஞ்சியாறுக்கே செல்லும் வகையில் மிக நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.கவலைக்கிடமான ஆறுதற்போது ஆற்றின் நிலை என்னவோ கவலைக்கிடமாகத்தான் உள்ளது. முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த ஆறு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது.
அணைப்பட்டி தடுப்பணைக்கு வரும் வரை 130 அடியாக இருந்தது, தற்போது 30 அடியாக இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அருகே விவசாய நிலம் வைத்திருப்போர் சாகுபடி பரப்பை விரிவுபடுத்தி 100 அடி வரை ஆக்கிரமித்துள்ளனர். அத்துடன், ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி., நகர், குறிஞ்சி நகர் உட்பட பல பகுதிகளின் கழிவு நீரும் இதில் கலக்கிறது. பால் சுரக்கும் மடியை பாழ்படுத்துவது போல பயிர்செழிக்க உதவும் ஆற்றை பாழ்படுத்தியுள்ளனர்.அணைப்பட்டியிலிருந்து கிளை வாய்க்கால் வழியாக சடையன் குளம் வரை ஆற்று நீர் செல்கிறது. கிளை வாய்க்கால் பிரியும் இடத்தில் ஆறு முழுவதும் முட்புதர் நிறைந்துள்ளது. இதனால் ஆறு தேக்கமடைந்து விடுகிறது. வழித்தடத்தை தூர் வாரினால் மட்டுமே தொடர்ந்து அடுத்த பகுதிக்கு ஆற்றுநீர் தடையின்றி செல்ல முடியும்.
இந்நிலை நீடித்தால் சில ஆண்டுகளில் ஆற்றை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும்.செய்ய வேண்டியது என்னகடந்த ஆண்டு கலெக்டர் விஜயலட்சுமி, தடுப்பணையில் இருந்து செல்லும் கால்வாயை அளந்து ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டார். இப்பணி விழுதுகள் தன்னார்வ அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டது. இதனால் தற்போது பெய்த மழைக்கு தடையின்றி நீர் சென்று சடையன் குளம் நிறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோல ஒவ்வொரு குளத்திறகுமான கால்வாய், ஓடைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வருவாய் துறை மூலம் துல்லியமாக அளவீடு செய்து, எல்லைக்கற்கள் நட்டு, கரையை பலப்படுத்தி மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு மர வகைகளை நட வேண்டும். அப்போது தான் வரும் காலங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு வராமல் தடுக்க முடியும்.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பலமுறை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
ஆனால் செயல்படுத்தும் அதிகாரிகள் ஏனோ தயக்கம் காட்டுகின்றனர் என்றே தெரியவில்லை. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்படும்' என்று ஒற்றை வரியில் பதிலளிக்கின்றனர்.தங்கச்சியம்மாபட்டி சக்திவேல் கூறியதாவது: உற்பத்தியாகும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரை அளவீடு செய்து ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.ஒட்டன்சத்திரம் விஜயன் கூறியதாவது: நீராதாரமாக விளங்கும் நங்காஞ்சியாறு வழித்தடங்களில் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. கரையை சுருக்கி விட்டனர். அதனை ஆய்வு செய்து கரையை விரிவுபடுத்திட வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE