ராமநாதபுரம்:''தமிழகம் முழுவதும் 6 லட்சம் ஏக்கருக்கு மேல் கோயில் நிலம் இருந்தும் நிறைய கோயில்களில் பூஜை செய்ய வழியில்லாததால் அறநிலையத்துறையை வெளியேற்றிவிட்டு ஆன்மிகவாதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய தனிவாரியம் அமைக்க வேண்டும்'' என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
ராமநாதபுரத்தில் மேலும் அவர் கூறியதாவது:மறைந்த ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு திருச்சி சீராத்தோப்பில் ரூ.7 கோடியில் கட்டும் மணி மண்டப பூமி பூஜை ஜன.25ல் நடக்கிறது. குரூப் 1 தேர்வில் ஈ.வே.ரா, சினிமா குறித்து கேட்கப்பட்டது. தேர்வு குழுவில் நாத்திகர், நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளனர்.கம்பம், தேனி, வெள்ளியங்கிரி மலை, உடுமலை திருமூர்த்தி மலை போன்ற மலை பிரதேசங்களில் நக்சலைட் பயிற்சி முகாம் நடக்கிறது. உளவுத்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலில் பெரிய கலவரத்தை உருவாக்குவார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தடுக்க எஸ்.பி., தலைமையில் சிறப்பு படை அமைக்க வேண்டும்.
ஹிந்து கோயில்களில் ஹிந்துக்களை ஆன்மிகவாதிகளாக நியமிக்க வேண்டும். ராமேஸ்வரம் கோயில் தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும். மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டம், ஆலய தனிவாரியம் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சியை ஆதரிப்போம்.அ.தி.மு.க., அரசு ஊழல் செய்தாலும் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல் பட்டது. இந்த ஆட்சி ஆன்மிக அரசாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், திருமுருகன் காந்தி ஜாதிவெறியை துாண்டுகின்றனர்.இவ்வாறு பேசினார். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி, பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE