மதுரை: 'ஏசி'யுடன் கூடிய மூடிய சினிமா தியேட்டருக்குள் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்துள்ள தமிழக அரசு விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு நடக்க வேண்டிய மாவட்ட, மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசு பல நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையில் வீரர், வீராங்கனைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் அனுமதிக்கவில்லை. மற்ற எல்லா நிகழ்வுகளும் இயல்பாகிப் போன நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் போட்டிகள் நடத்தப்படாமல் அரசு காலம் தாழ்த்துகிறது.
தேசிய அளவில் விளையாட்டு வீரனோ வீராங்கனையோ உருவாவதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டு உழைப்பு தேவை. தொடர்ந்து பயிற்சி பெறுவது மட்டுமின்றி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே வெற்றியை தக்கவைக்க முடியும். கொரோனா காரணமாக இந்தாண்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சியிலும் போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்றபடி பயிற்சிகள் மாறுபடும். இதை குழுவாக பயிற்சியாளர் முன்னிலையில் செய்யும் போது தவறுகளை திருத்திக் கொண்டு திறம்பட விளையாடுவர்.
பயிற்சி, போட்டிக்கு அனுமதி இல்லாத நிலையில்ஆறு மாதங்களாக பயிற்சியின்றி வீரர், வீராங்கனைகள் உடல் எடை அதிகரித்துள்ளனர். அவர்கள் மறுபடியும் போட்டிக்குத் தேவையான வலிமை பெறுவதற்கு சில மாதங்களாகும். அனைத்து துறைகளிலும் 3 சதவீதம் வரையிலான காலிப் பணியிடங்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு விளையாடாததால் வேலை வாய்ப்பு கிடைக்காமல் வீரர்கள் விரக்தியில் உள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களின் தொழில் படிப்பு போன்ற உயர்கல்விக்கு விளையாட்டு கோட்டா சான்றிதழ் அவசியம். இந்தாண்டு பிளஸ் 2 படித்து கொண்டிருக்கும் வீரர், வீராங்கனைகள் விளையாடாததால் அவர்களின் அடுத்தாண்டுக்கான தொழிற்படிப்பு எதிர்காலம் வீணாகிறது. வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் வீரர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விளையாட்டு வீரர்கள் சங்க செயலாளர் கண்ணன் கூறியதாவது: பள்ளிகளுக்கு இடையேயான தேசிய போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு படிவம் 4, பல்கலைகளுக்கு இடையிலானபோட்டிகளுக்கு படிவம் 3, மாநிலங்களுக்கு இடையிலான தேசிய போட்டிக்கு படிவம் 2, இந்திய அணியில் இடம் பெற்றால் படிவம் 1 வழங்கப்படும். இதைக் கொண்டு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 2020 ஜனவரி, பிப்ரவரியில் 5 சதவீத போட்டிகள் மட்டுமே நடந்தன. விளையாட்டு வீரர்களின் தேர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. போட்டிகள் நடத்தி வேலைவாய்ப்புக்கான படிவங்களை அளிக்க வேண்டும் என்றார்.
தனிமனித பாதுகாப்பு, சமூக இடைவெளியுடன் விளையாட்டு போட்டிகளையும் நடத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வீரர், வீராங்கனைகளின் ஏக்கமாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE