'மீம்ஸ்' ஆன பாஸ்தா!
'மீம்' போடுவதற்கு சூப்பரான, 'டெம்ப்ளேட்' கிடைத்துவிட்டால் போதும், உடனே 'நெட்டிசன்'கள் அதை டிரெண்டாக்க தவறியதில்லை. இந்நிலையில், டுவிட்டர் வாசி ஒருவர், சமீபத்தில், வேகவைத்த பாஸ்தாவின் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். அதை பார்க்கும்போது, பாஸ்தாக்கள் ஏதோ, 'ஆ...' என கத்துவதை போல இருந்துள்ளது. சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள், உடனே அதை வைத்து வித விதமான மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.
ரூ.1கோடிக்கு பால் விற்பனை
குஜராத்தின், பனஸ்கந்தா மாவட்டத்தின், நாகனா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தல்சங்பாய் சவுத்ரி,62. இவரது, பால் பண்ணையில், 80க்கும் மேற்பட்ட எருமை மற்றும், 45 பசு மாடுகள் உள்ளன. இந்நிலையில், 2019ம் ஆண்டு ரூ.87.95 லட்சம், 2020ல் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள பால் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். இவரது பால் பண்ணையில் தற்போது, 15 பேர் வேலை செய்கின்றனர். மேலும், தன் நான்கு மகன்களை விட அதிகமாக சம்பாதிப்பது நான்தான் என பெருமைபட கூறியுள்ளார். இவரது திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
காசு வேணாம் பாட்டு போதும்
தைவானில் சொந்தமாக, கால் டாக்ஸி ஓட்டி வருபவர் துா சிங் லையாங். இவரது, டாக்ஸியில் பயணிக்கும் பயணிகள் கரோக்கி பாடலை பாடினால் கட்டணமில்லாத, சேவை மற்றும் பரிசுகளை கொடுக்கிறார். இதுகுறித்து கேட்டபோது, ''நான் கடந்த எட்டு ஆண்டுகளாக கரோக்கி பாடும் பயணிகளுக்கு இலவசமாக டாக்ஸி ஓட்டி வருகிறேன். என்னை போன்ற ஒரு அதிர்ஷ்டசாலியை எங்கும் பார்க்க முடியாது. என் டாக்ஸியில் வரும் பயணிகள், கரோக்கி பாடலை பாடினால், விரும்பும் இடத்துக்கு பயணிக்கலாம். மேலும், திறமையாக பாடுபவர்களை, வீடியோ பதிவு செய்து, யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்கிறேன்,'' என மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இவரது இந்த வித்தியாசமான முயற்சி பலரையும் வியப்படைய செய்துள்ளது.
படிமங்கள் கண்டுபிடிப்பு
ரஷ்யானின், மாஸ்கோ கிழக்கு பகுதியில் உள்ள டோபோல் நதியில், புதைந்து கிடக்கும் பழங்கால வரலாறு குறித்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. குளிர் மிகுந்த நதிக்கு அடியில், ஆழ்கடல் வீரர்களை கொண்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பழங்கால விலங்குகளின் உடல் பாகங்கள், படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். தற்போது, அந்த படிமங்களின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE