சென்னை:வடகிழக்கு பருவ மழையால், மாநிலம் முழுதும் உள்ள, 90 அணைகளில், 165 டி.எம்.சி., நீர் கையிருப்பில் உள்ளது.
தமிழகத்தில், பொதுப்பணித் துறை பராமரிப்பில், மாநிலம் முழுதும், 90 அணைகள் உள்ளன. இவை, 224 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை.இதன் வாயிலாக, பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகிறது. வனவிலங்குகள், பறவைகளின் நீராதாரமாகவும், பல அணைகள் உள்ளன.
கடந்தாண்டு ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவமழையால், பல அணைகள் நிரம்பின. அவற்றில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு, தொடர்ந்து நீர் எடுக்கப்பட்டு வந்ததால், கையிருப்பு குறைந்தது.அக்டோபரில், வடகிழக்கு பருவ மழை துவங்கியதால், பல அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து கிடைத்து வருகிறது. இதனால், அணைகளின் நீர் கையிருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 90 அணைகளிலும் சேர்த்து, 165 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக, மேட்டூர் அணையில், 71.3 டி.எம்.சி., நீர் உள்ளது.பவானிசாகர் - 24.8; பரம்பிக்குளம் - 12.1; பாபநாசம் - 5.43; மணிமுத்தாறு - 5.25; அமராவதி - 3.96; சாத்தனுார் - 3.93; வைகை - 3.71; பேச்சிப்பாறை - 3.53; ஆழியாறு அணையில், 3.04 டி.எம்.சி., இருப்பு உள்ளது.மழை தொடர்வதால், நீர் கையிருப்பு மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE