புதுடில்லி:லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக அவரது இளைய சகோதரி மற்றும் மைத்துனர் 'அப்ரூவர்' ஆக சம்மதித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நிரவ் மோடியின் இளைய சகோதரி புர்வி மோடி 47 ஐரோப்பிய நாடான பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இவரது கணவர் மயன்க் மேத்தா பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.வங்கி மோசடி வழக்கில் இவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் பல்வேறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
புர்வி மோடி பெயரில் இருந்த சுவிஸ் வங்கி கணக்குகள் உள்ளிட்ட சில சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.இந்நிலையில் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தங்களுக்கு தெரிந்த விபரங்கள் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அளித்து 'அப்ரூவர்' ஆக புர்வியும் மயன்க்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதன் வாயிலாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிரவ் மோடிக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 579 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய இவர்கள் உதவ உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE